• Homepage
  • >
  • செய்திகள்
  • >
  • தகுதி தேர்வை தாய்மொழியில் நடத்திட கோரி வலியுறுத்தல்.

தகுதி தேர்வை தாய்மொழியில் நடத்திட கோரி வலியுறுத்தல்.

  • by editor
  • 4 Months ago
  • 0

தமிழகத்தில் இந்த ஆண்டு ஏப்ரல் 23 அன்று நடைபெறவுள்ள உதவி பேராசிரியர்களுக்கான மாநில அளவிலான தகுதி தேர்வு ஆங்கிலத்தில் மட்டுமே நடைபெறும் என அன்னைதெரசா மகளிர் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளதை இந்திய மாணவர் சங்கம் கண்டிக்கின்றது. மேலும் தாய்மொழியில் நடத்திட உரிய நடவடிக்கை  எடுக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறது.

மாநில அளவில் உதவி பேராசிரியர்களுக்கான தகுதி தேர்வு 6 மாதத்துக்கு ஒருமுறை நடத்திட வேண்டும். ஆனால் தமிழகத்தை பொறுத்தவரை அது இன்றும் கேள்விக்குறியாகவே உள்ளது. 2013 ல் கோவை பாரதியார் பல்கலைக்கழகம் இத்தேர்வை நடத்தியது. அதன் பிறகு நீண்ட இடைவெளிக்கு பிறகு 2016 ல் கொடைக்கானலில் உள்ள அன்னைதெரசா மகளிர் பல்கலைக்கழகம் இத்தேர்வை நடத்தியது. அத்தேர்வில் ஏராளமான குளறுபடிகளும் நடந்தது. தேசிய அளவில் நடைபெறும் தகுதி தேர்வு (சூநுகூ) கட்டணத்தைவிட பல மடங்கு கூடுதல் கட்டணத்தை வசூலித்தது, தத்துவம், இசை, உடற்கல்வி, பொதுநிர்வாகம், நூலக அறிவியல் உள்ளிட்ட பாடங்களை தேர்வு பட்டியலில் இருந்து விலக்கியது, கடைசி நேரத்தில் தேர்வு மையங்களை மாற்றி தேர்வு எழுதும் மாணவர்களை அலையவிட்டது, கேள்வித்தாளை தேர்வு முடிந்தவுடன் மாணவர்களிடம் இருந்து திரும்ப பெற்றது என ஏராளமான குளறுபடிகளோடுதான் கடந்தாண்டு தேர்வை அன்னைதெரசா பல்கலைக்கழகம் நடத்தியது.

இதை அப்பல்கலைக்கழத்திற்கு சுட்டிகாட்டிய பிறகும் அதை சரிசெய்வதைவிடுத்து, இந்தாண்டும் தேர்வு கட்டணத்தை குறைக்காமல் கட்டணக்கொள்ளை அடிக்கும் நோக்கத்தோடும் மேலும் மாணவர்களுக்கு மனஉளைச்சலை உருவாக்கும் விதத்தில் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள தேர்வை ஆங்கிலத்தில் மட்டுமே நடத்துவோம் தமிழ்மொழியில் கேள்விதாள்கள் கிடையாது என அறிவித்திருக்கிறது.

பல ஆண்டுகாலமாக தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நடத்தி வந்த இத்தேர்வு ஆங்கிலத்தில் மட்டும் நடைபெறும் என அறிவித்திருப்பது திட்டமிட்டு தமிழ் மொழியை புறக்கணிப்பதாகவே உள்ளது.  இந்தியாவில் கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, மத்திய பிரதேசம் என பல மாநிலங்களில் நடத்தப்படும் இத்தேர்வு அந்தந்த மாநில மொழிகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வரும் சூழலில் தமிழகத்தில் மட்டும் தமிழ்மொழியில் வினாத்தாள் இல்லை என அறிவித்திருப்பது தமிழ் மொழியில் பயின்று வரும் கிராமப்புற மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விகுள்ளாக்குவதாகவே உள்ளது. மேலும் இது போன்ற நடவடிக்கைகள் அன்னைதெரசா பல்கலைக்கழகத்தின் நிர்வாகம் சார்ந்த குளறுபடிகளையும், சமூகம் சார்ந்த அக்கறையின்மையையும் எடுத்துகாட்டுகிறது. எனவே தமிழக அரசு இப்பிரச்சனையில் உடனடியாக தலையிட்டு தமிழ்மொழியில் தேர்வு நடத்திடவும் இடைவெளியின்றி 6 மாதத்திற்கு ஒருமுறை தொடர்ந்து தேர்வு நடத்தவும் உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் என இந்திய மாணவர் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக்குழு கேட்டுக்கொள்கிறது.

  • facebook
  • googleplus
  • twitter
  • linkedin
  • linkedin
Previous «

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *