• Homepage
  • >
  • செய்திகள்
  • >
  • நீட் தேர்வுக்கு எதிரான மசோதா தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றம் – இந்திய மாணவர் சங்கம் வரவேற்பு

நீட் தேர்வுக்கு எதிரான மசோதா தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றம் – இந்திய மாணவர் சங்கம் வரவேற்பு

  • by editor
  • 5 Months ago
  • 0

எம்.பி.பி.எஸ் – பி.டி.எஸ் மற்றும் மருத்துவ மேற்படிப்புகளில் சேர்வதற்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்விலிருந்து (நீட்) தமிழகத்துக்கு விலக்கு அளிக்கும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள சட்டத்தை இந்திய மாணவர் சங்கம் வரவேற்கிறது.

தமிழகத்தில் தற்போது பிளஸ் 2 தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் எம்.பி.பி.எஸ் – பி.டி.எஸ் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. ஆனால் மருத்துவ இளநிலை முதுநிலை படிப்புகளுக்கு அனைத்து மருத்துவ கல்வி நிறுவனங்கள் பல் மருத்துவக் கல்வி நிறுவனங்களுக்கும் ஒரே சீரான நுழைவுத் தேர்வை நடத்த மத்திய அரசு 1956 ஆம் ஆண்டு இந்திய மருத்துவ மன்ற மையச் சட்டம் 102/1956 மற்றும் 1948 ஆம் ஆண்டு பல் மருத்துவர்கள் மையச் சட்டம் 16/1948 மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்துள்ளது.

மத்தியில் ஆட்சி செய்யும் பிஜேபி அரசு ஆட்சிக்கு வந்தது முதல் ஆர்.எஸ்.எஸ்  கொள்கைப்படி தன்னுடைய காவிமயமாக்கும் திட்டத்தை அனைத்து துறைகளிலும் அமல்படுத்தும் விதமாகவே நடந்துகொள்கிறது. கல்வித் துறையிலும் பல மாறுதல்களை செய்து வருகிறது. ஒரே நாடு, ஒரே தேர்வு என்ற அடிப்படையில் நீட் தேர்வை நடத்தி வருகிறது.

தமிழகத்தில் இத்தேர்வை நடத்தினால் கிராமப்புற ஏழை,எளிய,தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவ படிப்பு படிக்க வேண்டும் என்கிற லட்சியம் வெறும் கனவாகவே மாறிப்போகும். நீட் தேர்வானது மத்திய இடைநிலை கல்விக்குழுமம் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் அடிப்படையிலேயே தேர்வு நடத்தப்படுகிறது. தமிழகத்தில் மேல்நிலைக் கல்வி வாரியத்தால் வகுக்கப்பட்ட பாடத் திட்டத்திலேயே மாணவர்கள் படிக்கின்றனர். ஆகவே படிப்பது ஒன்றும் தேர்வு எழுதுவது வேறொன்றுமாக இருந்தால் மாணவர்கள் தேர்ச்சி பெற முடியாமல் போகிறது. இதனால் அரசு மற்றும் தனியார் மாநில பாடத்திட்டத்தில் படிப்பை முடித்த சாதாரண குடும்பங்களை சேர்ந்த மாணவர்களுக்கு மருத்துவ படிப்புக்கான வாய்ப்பு திட்டமிட்டு மறுக்கப்பட்டு வருகின்றது.

கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்வில் வெறும் 3 சதவீதம் மட்டுமே மாநில பாடத் திட்டத்திலிருந்து கேள்விகளை கேட்டுள்ளனர். கிராமப்புற மாணவர்கள் தேர்ச்சி பெறும் வகையில் போதிய நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி மையங்கள் தமிழகத்தில் போதுமான அளவு இல்லை. மருத்துவ கல்லூரிகள் குறைவான அளவே உள்ள ராஜஸ்தான் மாநிலத்தில் 100க்கும் மேற்பட்ட பயிற்சி மையங்கள் உள்ளன. இந்த சூழலில் தமிழகத்தில் தேர்வு நடந்தால் 4500க்கும் மேற்பட்ட மருத்துவ கல்லூரி இடங்களில் பெரும் எண்ணிக்கையில் சிபிஎஸ்சி மாணவர்களுக்கே மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கும்.

மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் சேர வாய்ப்பு மறுக்கும் நீட் தேர்வில் விலக்கு கேட்டு சட்டமன்றத்தில் தமிழக அரசு நிறைவேற்றியுள்ள சட்டம் வரவேற்புக்குரியது. தமிழக அரசின் இந்த ஆக்கப்பூர்வ நடவடிக்கைக்கு இந்திய மாணவர் சங்கம் பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறது. இதோடு நிற்காமல் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அகில இந்திய பொது நுழைவுத்தேர்வு நீட் மூலம் தேர்ச்சி பெற்றவர்களை ஒற்றை சாளர முறைப்படி சேர்க்க வேண்டும்.

பட்ட மேற்படிப்பு நீட் தேர்வில் 15 சதவீத இடங்களை மட்டுமே அகில இந்திய தொகுப்பிற்கு கொடுக்க வேண்டும். மீதமுள்ள 85 சதவீத இடங்களுக்கு தமிழக மாணவர்களுக்கே மருத்துவ மேற்படிப்பு இடங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும். நுழைவுத்தேர்வு எழுத ஆதார் எண் கட்டாயம் என்கிற நடைமுறை திரும்ப பெறப்பட வேண்டும். தனியார் மருத்துவக் கல்லூரிகளில் கட்டண வசூலை முறைபடுத்த  வேண்டும். அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்று இந்திய மாணவர் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக்குழு  வலியுறுத்துகிறது.

  • facebook
  • googleplus
  • twitter
  • linkedin
  • linkedin
Previous «
Next »

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *