• Homepage
  • >
  • செய்திகள்
  • >
  • எஸ்.ஆர்.எம்.பச்சமுத்துவை கட்டாய நன்கொடை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தயங்கும் தமிழக அரசு இந்திய மாணவர் சங்கம் கண்டனம்

எஸ்.ஆர்.எம்.பச்சமுத்துவை கட்டாய நன்கொடை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தயங்கும் தமிழக அரசு இந்திய மாணவர் சங்கம் கண்டனம்

  • by admin
  • 8 Months ago
  • 1

மருத்துவ மாணவர் சேர்க்கையில் மோசடி செய்த எஸ்.ஆர்.எம்.பச்சமுத்து கைது – நீதிமன்றத்தில் 69 கோடியை செலுத்த ஒப்புதல்- கட்டாய நன்கொடை தடுப்புச் சட்டத்தின் கீழ்  நடவடிக்கை எடுக்க தயங்கும் தமிழக அரசு – இந்திய மாணவர் சங்கம் கண்டனம்

உயர்கல்வியில் தனியார்மயத்தை அனுமதித்ததின் விளைவாக, இன்றைக்கு தமிழகத்தில் அரசு கல்லூரிகளை விட தனியார் கல்லூரிகளே அதிகமாக உள்ளது. அதிலும் மருத்துவம், பொறியியல் ஆகிய துறைகளில் ஏராளமான தனியார் கல்லூரிகள் வந்துள்ளன. இக்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை நடத்துவதற்கான அரசு விதிகள் எதையும் பின்பற்றாமல், தன்னிச்சையான போக்கில் நடந்துக் கொள்வதோடு, சட்டத்திற்கு விரோதமான முறையில் லட்சக்கணக்கான ரூபாய்களை நன்கொடை என்ற பெயரில் கொள்ளையடித்து வருகின்றனர். இதை தடுப்பதற்காக கொண்டு வரப்பட்ட கட்டாய நன்கொடை தடுப்புச் சட்டம் ஏட்டளவில் மட்டுமே உள்ளது.

எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்காக மாணவர்களிடம் இருந்து ரூ.69 கோடியை பெற்று கொண்டு ஏமாற்றிய வழக்கில் எஸ்.ஆர்.எம். குழுமத்தின் பச்சமுத்து கைது செய்யப்பட்டுள்ளார். நீதிமன்றத்தில் அத்தொகையை திரும்ப அளிக்க பச்சமுத்து தரப்பு முன்வந்துள்ளது. மருத்துவ சேர்க்கையில் முறைகேடு நடந்து, நீதிமன்ற நடவடிக்கைக்கு ஆளாகிய பிறகும்கூட, தற்போது வரையிலும் இதுபற்றி முதல்வர் ஜெயலலிதா மவுனமாகவே உள்ளார்.

கட்டாய நன்கொடை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதற்கான எல்லா முகாந்திரமும் இருந்தபோதும் கூட, அரசு நிர்வாகம் அமைதியாகவே உள்ளது. கட்டாய நன்கொடை வசூல் என்பதை பொருளாதார குற்றமாகவும் கருத வேண்டும். ஆனால், மருத்துவக் கல்வியில் அதிமுக அரசின் அலட்சியத்தின் காரணமாக விழுப்புரம் எஸ்.வி.எஸ். கல்லூரி, டி.டி. கல்லூரி என மருத்துவக் கல்லூரிகள் கட்டணக் கொள்ளைக்கான களமாகவும் மாணவர்களின் வதைமுகாம்களாகவும் மாற்றப்பட்டுள்ளன.

திருவள்ளுர் டி.டி. கல்லூரி துவங்கி தற்போது திருநின்றவூரில் சீல் வைக்கப்பட்ட நர்சிங் கல்லூரி வரை தமிழகத்தில் அனுமதியில்லாமலே ஆயிரக்கணக்கான மருத்துவம் சார்ந்த கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இவை அனைத்திலும் கட்டணக் கொள்ளை நடந்து வருகிறது.

புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் எதையும் தமிழகத்தை ஆண்ட திராவிட கட்சிகள் கொண்டு வராத பின்னணியில், தனியார் கல்லூரிகளையே மாணவர்கள் நாடி செல்ல வேண்டியுள்ளது.   மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான விதிமுறைகளையோ, தர வரிசையையோ எதையும் பின்பற்றாமல் பணவரிசையின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.

தற்போதும் கூட, தமிழகத்தின் இதர மருத்துவக் கல்லூரிகளிலும் கட்டணக் கொள்ளை வேகமாக நடந்து வருகிறது. கல்வியை தனியார்மயமாக்கியதோடு மட்டுமல்லாமல் வியாபாரமயமாக்கி, மருத்துவக் கல்வியை பணமுள்ளவர்களுக்கே என்ற நிலையை உருவாக்கி, பெரும்பகுதி ஏழை மக்களை மருத்துவக் கல்வியிலிருந்து துரத்தியடிக்கிற வேலையை தமிழக அரசு செய்து வருகிறது.

இதன் மூலம் ஏற்றத்தாழ்வில்லாத, சமமான, தரமான கல்வியை அனைவருக்கும் கொடுப்பதற்கு பதிலாக, மாணவர்களிடம் கொள்ளையடித்து மோசடி செய்யும் தனியார் கல்லூரிகளுக்கு அரசு நிர்வாகமே துணை போவது என்பது சட்டத்திற்கு புறம்பானது என்பதை தமிழக அரசு உணர வேண்டும். இதை இந்திய மாணவர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.

நீதிமன்றத்தில் வழக்கு வந்தபிறகும் கூட எஸ்.ஆர்.எம். கவி குழுமம் மீது கட்டாய நன்கொடை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தமிழக அரசு தயங்குவது என்பது தனியார் கல்லூரிகளின் இந்த கட்டணக் கொள்ளை அரசின் அனுமதியோடு தான் நடக்கிறதோ என்ற அச்சத்தை மாணவர்கள் மத்தியில் எழுப்பியுள்ளது.

எனவே, மாணவர்களின் நலனை காத்திடவும், மாணவர்களுக்கு எழுந்துள்ள அச்சத்தை போக்கிடும் வகையிலும், தமிழக அரசு உடனடியாக எஸ்.ஆர்.எம். குழுமத்தின் அனைத்து கல்லூரிகளில் ஆய்வு நடத்தி, கட்டாய நன்கொடை தடுப்புச் சட்டத்தின் நடவடிக்கை எடுப்பதோடு, நன்கொடை வசூலை பொருளாதார குற்றம் என்று வகைப்படுத்தி, குற்றவியல் நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் எனவும், தமிழகத்தின் இதர மருத்துவம், பொறியியல் கல்லூரிகளிலும் நடைபெறும் கட்டணக் கொள்ளைகளை தடுத்திட வலுவான தலையீட்டை செய்திட வேண்டும் எனவும், அரசின் அங்கீகாரம் இல்லாமல் இயங்கும் தனியார் மருத்துவம் சார்ந்த கல்லூரிகளின் மீது உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு அரசுக் கல்லூரிகளாக ஏற்றிட வேண்டும் எனவும் இந்திய மாணவர் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக்குழு வலியுறுத்துகிறது.

கல்விக் கட்டணக் கொள்ளைக்கு எதிரான நடவடிக்கைகளில் தமிழக அரசின் மெத்தனப் போக்கு நீடிக்குமென்றால், அதற்கு எதிரான வலுவான போராட்டத்தை தமிழகத்தின் அனைத்து கல்லூரிகளிலும் இந்திய மாணவர் சங்கம் முன்னெக்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

எஸ்.ஆர்.எம். கல்லூரியின் கட்டணக் கொள்ளைக்கு எதிராக நீதிப் போராட்டத்தில் உள்ள மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் இந்திய மாணவர் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக்குழு வாழ்த்துக்களை தெரிவிக்கிறது. தமிழகத்தின் அனைத்து மருத்துவக் கல்லூரியில் படிக்கும் மாணவர்களும் கட்டணக் கொள்ளைக்கு எதிரான போராட்டத்தில் முன்வர வேண்டும் என இந்திய மாணவர் சங்கம் அறைகூவி அழைக்கிறது.

இந்த செய்தியை தங்கள் பத்திரிகை / ஊடகத்தில் வெளியிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

  • facebook
  • googleplus
  • twitter
  • linkedin
  • linkedin
Previous «
Next »

1 Comment Already

  1. The protesting SFI activists, who had gagged their mouth with black cloth, alleged that special fee was being collected from the students in addition to regular fee. Moreover, exorbitant fee was being collected in the hostel mess though adequate facilities were not available in the hostel. After the representatives of the college administration held talks with the protestors, the agitation was withdrawn.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *