• Homepage
 • >
 • செய்திகள்
 • >
 • செப்டம்பர் 2 – அகில இந்திய வேலைநிறுத்தத்திற்கு ஆதரவு

செப்டம்பர் 2 – அகில இந்திய வேலைநிறுத்தத்திற்கு ஆதரவு

 • by editor
 • 10 Months ago
 • 0

மத்திய அரசின் மக்கள் விரோதப் போக்கை எதிர்த்து இந்திய தேசம் முழுவதும் செப்டம்பர் 2-ஆம் தேதி பொது வேலைநிறுத்தம் செய்திட அனைத்து தொழிற்சங்கங்களும் அறைகூவல் விடுத்துள்ளன. இந்த பொது வேலை நிறுத்தத்தில் இந்திய மாணவர் சங்கமும் பங்கேற்கிறது.

இன்றைக்கு மத்தியில் ஆட்சிக்கு வந்துள்ள பிஜேபி அரசு, கல்விநிலையங்களை காவிமயமாக்கிட தீவிரமாக செயல்பட்டு வருகிறது. சென்னை ஐஐடியில் அம்பேத்கர்-பெரியார் படிப்பு வட்டம் மீதான தடை, ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் ரோஹித் வெமுலா உள்ளிட்ட மாணவர்கள் மீதான அடக்குமுறை, அதை தொடர்ந்து ரோஹித் வெமுலாவின் மரணம், தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தேச விரோதிகள் என குற்றம்சாட்டி முற்போக்கு எண்ணம் கொண்ட மாணவர்கள் மீதான அரசு பயங்கரவாதம், தற்போது புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் மாணவர் பேரவை கொண்டு வந்த மாணவர் இதழ் மீதான தடை என பல்கலைக்கழகங்களில் தனது மதவெறி கொள்கைகளை புகுத்திடவும், தங்களது பிற்போக்குதனங்களுக்கு எதிராக முன்நிற்கும் மாணவர்களை அடக்கி ஒடுக்கவும் மத்திய பிஜேபி அரசு செயல்பட்டு வருகிறது.

மத்திய பல்கலைக்கழகங்களை மதவெறி கூடாரங்களாக மாற்றிட வேண்டி தனது மாணவர் அமைப்பான ஏபிவிபி மூலம் பொய்ப் பிரச்சாரங்களையும், மாணவர்கள் மீது தாக்குதல்களையும் நடத்தி வருகிறது. இவர்களின் இசைவிற்கு ஏற்ப நடந்துக் கொள்கிற ஆர்.எஸ்.எஸ்.காரர்களை பல்கலைக்கழகத்தின் எந்த விதிமுறைகளையும் பின்பற்றாமல் அராஜகமான முறையில், ஜனநாயகத்திற்கு விரோதமான வகையில் துணைவேந்தர்களாக நியமித்து வருகிறது. ஆர்.எஸ்.எஸ். பிற்போக்குதனத்தையும், தனியார்மய ஆதரவு கொள்கை கொண்டவர்களையும் எல்லா உயர்கல்வி நிறுவனங்களின் தலைமையிடங்களை நியமித்து வருகின்றனர். இதற்கு எதிரான வீரஞ்செறிந்த போராட்டத்தை மாணவர்கள் நடத்தி வருகின்றனர். புனே திரைப்படக் கல்லூரியின் போராட்டக் களம் இதற்கு சாட்சியாக நிற்கிறது.

மறுபுறத்தில், கல்வியில் மாநிலங்களுக்கு இருந்த கொஞ்ச நஞ்ச உரிமைகளையும் பறித்து கல்வியை மத்தியப்படுத்துவதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறது. புதிய கல்விக் கொள்கையை கொண்டு வருவதற்காக தற்போது வெளியிடப்பட்டுள்ள ஆவணத்தில் பல்வேறு பிற்போக்குதனமாக கருத்துக்களை கொண்டு வந்துள்ளது. அதிலும் கல்வியை காவிமயமாக்கிடவும், மாணவர் ஜனநாயக உரிமைகளை பறித்திடவும், குழந்தைகளின் கல்வி உரிமையை பறித்து, அவர்களை தொழிலாளர்களாக இருக்கச் செய்திடுவதற்கான ஆபத்தான பரிந்துரைகளை உள்ளடக்கியதாக அந்த ஆவணம் உள்ளது. இதை இந்திய மாணவர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. இது பிஜேபி அரசின் மதவாத நடவடிக்கையின் ஒருபகுதியாகவே பார்க்க வேண்டியுள்ளது.

பேராசிரியர்கள் நியமனம், மாநிலங்களுக்கு சமஉரிமை, புதிய பல்கலைக்கழகங்கள், கல்விக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு என ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எதையும் செய்யாத மத்திய பிஜேபி அரசு, கடந்த பட்ஜெட்டில் கல்விக்கான நிதியை பெருமளவு குறைத்துள்ளது. அது மட்டுமல்லாமல், உயர்கல்வி நிறுவனங்களுக்கு மூடுவிழா நடத்திவிட்டு, அதிகாரத்தை மையப்படுத்துவதற்கான ஏற்பாடுகளையும் செய்து வருகிறது.

 டெல்லி பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்களுக்கு எதிரான அரசாணை வெளியிட்டது, மத்தியப் பல்கலைக்கழகங்களில் மாணவர் ஜனநாயக உரிமைகளை மறுப்பது, அனைத்து கல்விநிலையங்களிலும் சமஸ்கிருதத்தை திணிக்க முயற்சிப்பது என மாணவர் விரோத அரசாகவும், தொழிலாளர் நலச் சட்டங்களை திருத்துவது, எல்லா துறைகளையும் தனியாருக்கு தாரைவார்ப்பது, அந்நிய முதலீட்டை அதிகரிப்பது, கேந்திரமான பொதுத்துறை தொழில்களின் பங்குகளை விற்பது என இந்த அரசு கடந்த 2 ஆண்டுகளில் மக்கள் விரோத, மாணவர் விரோத அரசாகவே இருந்து வந்துள்ளது.

சுதந்திரம் கிடைத்ததும் நல்ல வாழ்க்கையும், தரமான கல்வியும், சமூக பாதுகாப்புடனான வேலையும் கிடைக்கும் என்ற நம்பிக்கை இன்று தகர்ந்துள்ளது. இந்தியாவின் பெரும்பான்மை மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குள்ளாக்கப்பட்டு உள்ளது. ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் அதிகமாகியுள்ளது. கல்வி தனியார்மயப் படுத்தப்பட்டு வியாபாரமாகியுள்ளது. நிரந்தர வேலை என்பது புறந்தள்ளப்பட்டு, எப்போது வேண்டுமானாலும் தூக்கியெறிப்படலாம் என்ற நிபந்தனையோடு கிடைக்கும் தற்காலிக வேலைகள் என பிரச்சனைகளை சூழ்ந்துள்ள நேரம் இது.

இந்தியாவை அமெரிக்க ஏகாதிபத்திய நலனுக்கு பலிகொடுக்க துடிக்கிறது மோடி அரசு. எல்லா துறையும் தனியார்மயம் என கொக்கரிக்கிறது. மறுபுறத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பு தனது சங் பரிவார் அமைப்புகள் மூலம் தலித் மக்கள் மீதும், முஸ்லீம் மக்களின் மீதும் தாக்குதல் நடத்தி வருகிறது. பசு பாதுகாப்பு இயக்கத்தின் மூலம் வன்முறையை கட்டவிழ்த்துள்ளது.

அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் வேலை என்ற முழக்கங்களின் பின்னால் ஜனங்களின் நலன் என்பதே உள்ளது. ஜனங்களின் நலனுக்கான போராட்டத்தை முன்னெடுப்பதே மாணவர் இயக்கத்தின் இன்றைய தலையாய கடமை என்பதை நாம் உணர வேண்டும். மக்களுக்கான கோரிக்கைகளோடு மாணவர்களின் கோரிக்கைகளும் இணைகிற போது மகத்தான மாற்றம் நிகழும்.

மத்திய பிஜேபி அரசின் தவறான கொள்கைகளுக்கு எதிராக கிளர்ந்தெழுந்துள்ள தொழிலாளர்களோடு கரம்கோர்ப்போம். இந்திய தேசத்தின் அனைத்து கல்விநிலையங்களிலும் புதிய கல்விக் கொள்கைக்கு எதிராகவும், மாணவர் விரோத பிஜேபி அரசின் மதவாத நடவடிக்கைகளுக்கு எதிராகவும் கிளர்ந்தெழுந்திட இந்திய மாணவர் சங்கத்தின் மத்தியக்குழு அறைகூவல் விடுத்துள்ளது. கல்விக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவிகித நிதி ஒதுக்கீடு, பொதுக்கல்வியை பாதுகாத்திடு முழக்கத்தோடு இந்த பொது வேலைநிறுத்தத்தில் பங்கேற்றிட தமிழக மாணவர்களை இந்திய மாணவர் அறைகூவி அழைக்கிறது.

அனைத்து கல்விநிலையங்களிலும் போராட்டங்களை வலுவான முறையில் முன்னெடுத்திட வேண்டும் என இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டக்குழுக்களை கேட்டுக் கொள்கிறோம்.

மாணவர், வாலிபர், மாதர், தொழிலாளர்கள், விவசாயிகள் உள்ளிட்டோருடன் முற்போக்கு எண்ணம் கொண்ட அனைத்து மாணவர் அமைப்புகளும் இந்த பொது வேலைநிறுத்தத்திலும் மறியல் போராட்டத்திலும் பங்கேற்றிட வேண்டுமெனவும் இந்திய மாணவர் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக்குழு கேட்டுக் கொள்கிறது.

 • facebook
 • googleplus
 • twitter
 • linkedin
 • linkedin
Next »

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *