• Homepage
 • >
 • திட்டம் மற்றும் அமைப்புச் சட்டம்

திட்டம் மற்றும் அமைப்புச் சட்டம்

இந்திய மாணவர் சங்கம்

திட்டம் மற்றும் அமைப்புச் சட்டம்

வெளியீடு :

இந்திய மாணவர் சங்கம்

தமிழ்நாடு மாநிலக் குழு

57/221, ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை. பெரியமேடு

சென்னை – 600 003.

போன்: 044-25611348.

www.sfitamilnadu.org

Email: sfitn@gmail.com

நமது பாரம்பரியம் :

 • இந்திய மாணவர் சங்கம், பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற, இந்திய மக்கள் நடத்திய நீண்ட போராட்டத்தில் பங்கேற்ற பெருமை உடையது. ஏகாதிபத்திய ஏதிர்ப்பு, தேசபக்தி, மதச்சார்பின்மை, ஜனநாயக மற்றும் முற்போக்கு பாரம்பரியத்தை கொண்டது. இந்திய பாரம்பரியத்தை நமது மாணவர் இயக்கம் முன்னெடுத்துச் செல்கிறது. சமூக மாற்றத்திற்கான பரந்து விரிந்த போராட்டத்தின் பிரிக்க முடியாத பகுதியாக மாணவர் சங்கம் தனது கோஷமாக சுதந்திரம், ஜனநாயம், மற்றும் சோசலிசம் என உயர்த்திப் பிடிக்கிறது.
 • நமது நாடு சில நூற்றாண்டுகள் காலனி ஆதிக்கத்தின் கீழ் அடிமைப்பட்டு கிடந்தது என்பதையும் உள்ளூர் நிலப்பிரபுகள் மற்றும் அந்நிய ஏகாதிபத்தியவாதிகளால் மிகக் கொடூரமாக சுரண்டப்பட்டது என்ற உண்மையையும் இந்திய மாணவர் சங்கம் மறக்கவில்லை. இந்த சுரண்டலே பெருவாரியான மக்களின் ஏழ்மை, பசி உள்ளிட்ட துன்ப துயரங்களுக்கும், பெரும் எண்ணிக்கையிலான மக்களை மிகவும் கீழான வாழ்க்கை நிலையில் வைத்திருக்கும் பல்வேறு விதமான சமூக தீங்குகளுக்கும் காரணம். இத்தகைய சமூக தீங்குகளுக்கு எதிராக வளர்ந்து வந்த உணர்வே, சமூக சீர்த்திருத்த இயக்கத்தை தோற்றுவித்து இந்த இயக்கத்தை பெரும் சமூக சீர்த்திருத்த சிந்தனையாளர்கள் தலைமைத் தாங்கினார்கள். பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்திற்கும், நிலப்பிரபுத்துவத்திற்கும் முடிவு கட்டும் விதத்தில், இந்திய மக்கள் நடத்திய போராட்டம் வரலாற்று சிறப்பு மிக்க தேசிய விடுதலை இயக்கத்திற்கு வழிகோலியது. இந்த இயக்கத்தில் மாணவர்களும் பெரும் பங்காற்றினார்கள்.
 • 1936-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 12-ஆம் தேதி அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் (AISF) உருவாக்கப்பட்டது. இந்திய மாணவர் சமூகத்தில் எழுந்த புரட்சிகர போக்கையும் முற்போக்கு நடவடிக்கைகளையும் ஒருங்கிணைத்து உறுதிபடுத்தும் விதத்தில் AISF உருவாக்கப்பட்டது. இதுவே அமைப்பு ரீதியாக திரட்டப்பட்ட இந்திய மாணவர் இயக்க வரலாற்றின் துவக்கமாகும். ஏகாதிபத்திய எதிர்ப்பு முழக்கத்தின் கீழ் அரசியல் பாகுபாடின்றி அனைத்து பகுதி மாணவர்களையும் அணிதிரட்டியது தான் AISFன் தனித்த செயல்பாடாகும். அதேசமயம், சர்வதேச அளவில் சோசலிச சோவியத் ஒன்றியம் மிக வேகமாக வளர்ச்சியை அடைந்து கொண்டிருந்தது. மறுபக்கம் தொழில் ரீதியாக முன்னேறிய முதலாளித்துவ நாடுகளில் நெருக்கடி ஆழமாகிக் கொண்டு இருந்தது. இது மாணவர் சமூகத்தை இடதுசாரி தத்துவத்தின்பால் ஈர்த்தது.
 • AISF உருவாக்கப்பட்ட வருடங்களில் முற்போக்கு மாணவர் இயக்கத்துக்கு வழிகாட்டிய இரண்டு அடிப்படையான அம்சங்கள் உறுதிப்பட்டு வந்ததை காண முடிந்தது. முதலாவது, மாணவர்கள் தங்களது உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்ள அமைப்பு ரீதியாக திரளும் தேவையும், உரிமையும் உள்ளது என்பதோடு, மிகப்பெரும் எண்ணிக்கையிலான நமது மக்களின் தேவைகளை சிந்திக்கிற ஒரு கல்வி முறைக்காக போராடுவது என்பதாகும். இரண்டாவது, இத்தகைய போராட்டங்கள் சமூகத்தில் இதர பகுதி மக்கள் நடத்தும் போராட்டங்களோடு விரிவான அளவில் இணையும் போதுதான் வெற்றி பெரும் என்பதை புரிந்து கொள்வது அவசியம் ஆகும்.
 • பாசிசத்திற்கு இரண்டாம் உலகப்போர் முடிவு கட்டியது. அதற்கு பிந்தைய வருடங்களில் காலனி ஆதிக்கத்திற்கு எதிராக பெருவாரியான மக்களின் எழுச்சியை இந்த உலகம் சந்தித்தது. இந்தக் காலத்தில், உலகில் பல்வேறு நாடுகளின் தேசிய விடுதலைப் போராட்டங்கள் உத்வேகம் பெற்றன. அதில் இந்தியாவும் ஒன்று, AISF இத்தகைய மக்கள் போரட்டங்களுக்கு அனைத்து விதத்திலும் தனது ஆதரவை தெரிவித்ததோடு இல்லாமல், முக்கியமான பங்கினையும் வகித்தது. இத்தகைய போராட்டங்களின் ஒட்டுமொத்த விளைவாகவே காலனி ஆதிக்கத்திலிருந்து இந்தியா அரசியல் விடுதலை பெற்றது. எனினும், அந்த தருணங்களில் பிரிட்டனின் தூண்டுதலோடு, மதவாதப் பிரிவினை ஆழமாகிக்கொண்டே இறுதியில் நாட்டை இரண்டாக பிரிப்பதை நோக்கி இட்டுச் சென்றது.
 • 1947ஆம் ஆண்டு சுதந்திரம், விடுதலை போராட்டத்தின் முற்போக்கு மற்றும் ஜனநாயக நோக்கங்களை நிறைவேற்றும் என்ற அதிக நம்பிக்கையை ஏற்படுத்தியது. சுதந்திரம் பெற்ற துவக்க காலத்தில் நாட்டில் ஒரு ஜனநாயக அரசியலை கட்டுவதிலும், காலனி ஆதிக்க தேக்க நிலையை உடைத்து பொருளாதாரத்தை முன்னேற்றுவதிலும் குறிப்பிடத் தகுந்த சாதனைகள் நிகழ்த்தப்பட்டன. எனினும், நமது நாட்டின் கோடிக்கணக்கான மக்களின் தேவைகளை முழுமையாக பூர்த்தி செய்ய போதுமானதாக அவை இருக்கவில்லை. முரண்பாடான அணுகுமுறைகள் மேற்கொள்ளப்பட்டதே இதற்கு காரணம். மத்தியில் ஆட்சியில் அமர்ந்த அரசு ஏகாதிபத்தியத்துடனும், நிலப்பிரபுத்துவத்துடனும் வரலாற்று ரீதியான சமரசம் செய்து கொண்டதோடு ஒரு முதலாளித்துவ பாதையை தேர்ந்தெடுத்தது, இதன் விளைவாக, நிலப்பிரபுத்துவ மற்றும் அரை நிலப்பிரபுத்துவ உறவுகள் இன்னும் வலுவாக நிலை நிருத்தப்பட்டன. இதன் விளைவாக, பொருளாதார வளர்ச்சியோ, ஜனநாயகமோ ஒரு வலுவான அடித்தளத்தை பெறமுடியவில்லை, கல்வித்துறையிலும்  கூட சுதந்திரத்திற்கு பிந்தைய வருடங்களில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டபோதிலும், அது குறிப்பிட்ட சிலரையே சென்றடைந்தது. அரசியல் சாசனத்தில் வழிகாட்டப்பட்டுள்ள அனைவருக்கும் கட்டாய ஆரம்பக் கல்வி என்பது இன்னும் முழுமையாக நிறைவேற்றப்படாமலேயே உள்ளது.
 • ஆளும் வர்க்கம் பின்பற்றிய கொள்கைகள் மாணவர்கள் இயக்கத்திற்குள் பல்வேறு கருத்து மாறுபாடுகளை உருவாக்கியது. மாணவர் இயக்கத்தின் தலைமையில் ஒரு பிரிவினர் அப்போதைய காங்கிரஸ் அரசின் கொள்கைகளை ஆதரித்தனர். இதன் மூலம் அவர்கள் மாணவர் இயக்கத்தை அன்றைய காங்கிரஸ் அரசின் கொள்கைகளின் வாலாக ஆக்க முயற்சித்தனர். ஆனால், மற்றொரு தரப்பினர் அரசின் கொள்கைகளுக்கு எதிராக, மாணவர் சமூகத்தை அணிதிரட்ட வேண்டுமென வலியுறுத்தினர். எனினும் அரசின் கொள்கைகளை ஆதரிக்க வேண்டும் என்று கூறியவர்கள் ஆதிக்கம் செலுத்தியதால் AISF 1960-ம் ஆண்டுகளில் காங்கிரஸ் அரசின் மக்கள் விரோத மற்றும் மாணவர் விரோத கொள்கைகளுக்கு எதிராக போராடும் வலுவை இழந்தது. இதன் விளைவாக மாணவர் இயக்கம் பல்வேறு மாநிலங்களில்   தனித்தனி அமைப்பாக செயல்பட ஆரம்பித்தது. இதனால் AISF இயக்கத்தின் முந்தைய பாரம்பரியத்தை மேலும் வலுபடுத்தும் நோக்கத்தில் ஒரு புதிய போர்க்குணம் மிக்க மாணவர் அமைப்பை உருவாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இதுவே 1970 ஆம் ஆண்டு டிசம்பர் 27 முதல் 30 வரை திருவனந்தபுரத்தில் அகில இந்திய மாநாடு நடத்தி இந்திய மாணவர் சங்கம் (SFI) உருவாக வித்திட்டது.
 • இந்திய மாணவர் சங்கம், உருவான நாள் முதலே படிப்போம், போராடுவோம்என்ற முழக்கத்தை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்கிறது. மேலும், சமூக புரட்சிக்கு மாணவர்களே தலைமைத் தாங்குவர் என முழங்கிய மாணவர் சக்தி என்ற சீர்குலைவுக் கோட்பாட்டை மிகத் திறமையாக எதிர்க்கொண்டது. அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்ட காலத்தில் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதலை எதிர்த்து இந்திய மாணவர் சங்கம் உறுதியாக போராடியது. எல்லோருக்கும் கல்வி, எல்லோருக்கும் வேலைஎனும் முழக்கம் நாடு முழுவதும் உள்ள மாணவர் திரளுக்கு விடுக்கப்பட்ட வலுவான அறைகூவல் ஆகும். இந்த அறைகூவல் பெரும் திரளான மாணவர்களை அமைப்பின் கீழ் அணிவகுக்க செய்தது. இந்திய மாணவர் சங்கம் உலகம் முழுவதும் நடைபெற்ற ஏகாதிபத்தியத்திற்கு எதிராக தேசிய விடுதலை இயக்கங்களுக்கும் உறுதியான ஆதரவை தெரிவித்தது.
 • 1986ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட புதிய கல்விக் கொள்கையானது, பொதுக் கல்விமுறை மீது பெரும் தாக்குதலை தொடுத்தது. அரசுத்துறையில் கல்வி பயில்வதற்கான வாய்ப்புகளை முற்றிலும் நிர்மூலமாக்கும் விதத்தில் இக்கொள்கையில் முன் வைக்கப்பட்ட ஆலோசனைகளை எதிர்த்து, ஒரு ஒன்றுபட்ட போராட்டத்தை இந்திய மாணவர் சங்கம் துவங்கியது. மண்டல் கமிஷனின் பரிந்துரைகளுக்கு மாறாக இடஓதுக்கீட்டை எதிர்த்து, நடைபெற்ற கலகத்தினை எதிர்த்து இந்திய மாணவர் சங்கம் கொள்கைப் பிடிப்புடன் உறுதியாக நின்றது. நாட்டின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் பாதுகாப்பதற்காக SFI போராடியது. மத நல்லிணக்கம், சமூக நீதி ஆகியவற்றுக்காகவும், போராட வீரத்தியாகங்களை செய்தது.
 • நவீன தாராளமய பொருளாதாரக் கொள்கைகள் அமுல்படுத்துவதால் தமது நாட்டின் மிகப் பெருவாரியான மக்கள் கடும் துன்பத்திற்கு ஆளாகி உள்ளனர் என்ற உண்மையை இந்திய மாணவர் சங்கம் முழுமையாக அறிந்திருந்தது. இந்தக் கொள்கைகள் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளைப் பெருவதிலிருந்து பெரும் எண்ணிக்கையிலான மாணவர்களை வெளியேற்றுகிறது. மறுபுறம் தீவிர வலதுசாரி மதவெறி சக்திகள் நமது கல்வி முறையில் காணப்படும் சிறிய ஜனநாயகம் மற்றும் மதச்சார்ப்பற்ற உள்ளடக்கத்தை திட்டமிட்டு சிதைத்து வருகின்றனர். பல்வேறு சமூகங்களிடையே வேற்றுமை உணர்வை விதைக்கும் முயற்சியாக மதவெறியையும், பகைமை உணர்வை தூண்டிவிடும் அரசியலையும் கல்வி முறைக்குள் திணிக்கிறார்கள். மாணவர்கள் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், நமது குடியரசின் மதசார்ப்பற்ற ஜனநாயக தன்மையையும், இறையாண்மையும் வலுப்படுத்துவதற்க்கும், மேற்கூறிய இரட்டை அபாயத்தை எதிர்த்து தீவிரமான போராட்டங்களை நடத்துவதிலும், இந்திய மாணவர் சங்கம் முன்னணியில் நிற்கிறது.
 • இந்திய மாணவர் சமூகத்தின் முந்தைய தலைமுறை, பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்திலிருந்து அரசியல் சுதந்திரத்தை அடையும் போராட்டதில் வீரம் நிறைந்த பெருமைமிகு பங்கினை ஆற்றியுள்ளது. இவர்களது பாரம்பரியத்தைப் பின்பற்றி நமது மாணவர் தலைமுறையின் துடிப்புமிக்கப் போராட்டமானது தீய சக்திகளை ஒழிப்பதிலும் மக்களின் பின்தங்கிய நிலைமை மற்றும் வறுமையை போக்குவதிலும், உண்மையான சுதந்திரம் மற்றும் முன்னேற்றத்திற்கு வழிகாட்டுவதிலும், நமது மக்களின் முற்போக்கான எதிர்காலத்துக்கு வித்திடுவதிலும் ஆக்கப்பூர்வமான பங்கினை செலுத்திட வேண்டும். ஒரு ஜனநாயக அறிவியல்பூர்வமான மற்றும் முற்போக்கு கல்வி முறையை அடைவதற்கு வழிகாட்டும் திட்டத்தினை மாணவர் சமூகத்தின் முன்பு இந்திய மாணவர் சங்கம் முன்வைக்கிறது. இந்த திட்டம் அனைத்து விதமான சுரண்டல்களிலிருந்து விடுதலை பெற்ற, ஒரு சோசலிச சமூகத்தை உருவாக்க, சமரசமற்ற, போராட்டத்தை முன்னேடுத்துச் செல்லும் என்கிற உறுதியை மாணவர் சமூகத்திற்கு அளிக்கிறது.

நமது தொலைநோக்குப் பார்வை 

 2.1. அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் வேலை என்ற இலக்கை உறுதிப்படுத்தும் ஒரு ஜனநாயக, அறிவியல் பூர்வமான, முற்போக்கு கல்வி முறையை நிலை நாட்டி போராடும் நம் நாட்டின் மாணவர் சமூகத்திற்கு தலைமை தாங்கும் வரலாற்றுக் கடமையைத் தன் தோள்களில் ஏற்று நிறைவு செய்திடும் என்று இந்திய மாணவர் சங்கம் உறுதி கூறுகிறது. மாணவர் சமூகம் என்பது  ஒட்டு மொத்த சமூகத்தின் ஒருங்கிணைந்த பகுதி ஆகும். மாணவர் சமூகத்தின் வாழ்க்கை மற்றும் கல்வி முன்னேற்றம் என்பது நமது சமூகத்தின் அனைத்து வகையான முன்னேற்றத்தையும் சார்ந்தே அமையும். எனவே, தேசத்தின் சமூக, பொருளாதார, அரசியல் மற்றும் கலாச்சார நிலைமைகளில் இருந்து விலகி நிற்காமல், அனைத்துத் துறைகளிலும் மிக வேகமான வளர்ச்சியும் முன்னேற்றமும் அடைய மாணவர்கள் பேரார்வத்துடன் செயல்படுவது இயல்பாகும்.

2.2. கல்வி, வேலை வாய்ப்புகள் மற்றும் வேலை செய்வதற்கான உரிமை ஆகியவற்றிற்கான ஒவ்வொரு கோரிக்கையும் பேச்சுரிமை, கூட்டம் கூடும் உரிமை, சங்கம் சேரும் உரிமை உள்ளிட்ட அடிப்படை சிவில் உரிமைகளை பாதுகாப்பதற்கான ஒவ்வொரு விளக்கமும், ஒடுக்குமுறையும், அல்லது அநீதிக்கு எதிரான ஒவ்வொன்றும்,வேறுபாடின்றி அரசாங்கத்தின் கொள்கையோடு பின்னிப் பிணைந்துள்ளன. எனவே, அவை ஒவ்வொன்றுக்கும் ஒரு அரசியல் குணாம்சம் இருக்கிறது. இந்த உண்மையின் பின்னணியில், இந்த உண்மையின் பின்னணியில், மாணவர்கள் அரசியலில் ஈடுபடக்கூடாதுஎன்றும் கல்வி அரசியல் தன்மை அற்றதாக இருக்க வேண்டும் என்றும் கூறுகிற வெற்று முழக்கங்களை ஆதரிப்பது ஒரு ஏமாற்று வேலையாகும். இத்தகைய ஏமாற்று கோஷங்கள், ஆளும் வர்க்கங்களின், மக்கள் விரோத கொள்கைகளால் ஏற்படும் கடும் விளைவுகளை கண்டு கொள்ளாமல் இருக்கும் அளவிற்கு மாணவர் சமூகத்தினரிடையே அரசியல் அறியாமையை நிலவ வேண்டும் என்கிற அரசியல் உள்நோக்கத்தை கொண்டது. மேற்கண்ட  கோஷங்கள் பழைமைவாத சுரண்டல் சமூக அமைப்பை அப்படியே பாதுக்காக்க செய்யும் ஏற்பாடு ஆகும் என்றும் இந்திய மாணவர் சங்கம் கூறுகிறது.

2.3. சுதந்திரம் அடைந்து 68 ஆண்டுகளுக்கு மேலாகியும் கூட, அனைத்துக் குழந்தைகளுக்கும் ஆரம்பக்கல்வியைக் கொடுப்பதில் அரசாங்கம் மிகவும் அப்பட்டமான தோல்வியை சந்தித்துள்ளது. இலட்சக்கணக்கான குழந்தைகள் பள்ளிக்கு செல்ல ஆர்வமுடன் உள்ள போதிலும், அவர்களின் கடுமையான வறுமைக் காரணமாக குழந்தைத் தொழிலாளர்களாக வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். அவர்களின் சமூக, பொருளாதார  நிலைமைகளில் முழுமையான மாற்றத்தைக் கொண்டுவராமல் குழந்தைத் தொழிலாளர் என்கிற மோசமான முறையை முடிவுக்கு கொண்டுவர முடியாது. அனைவருக்கும் ஆரம்பக் கல்வி என்ற இலக்கையும் எட்ட முடியாது, கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கையில் என்ன தான் உயர்வு ஏற்பட்டாலும் அது குறிப்பிட்ட வசதி படைத்த சிலருக்கு மட்டுமே தான் பயனளிப்பதாக உள்ளது. ஆரம்பக் கல்வியில் இருந்து பல்கலைக்கழக கல்வி வரை மிகப் பெருபான்மை மக்களுக்கு சென்றடையாமல் உள்ளது. பெரும் அளவிலான வணிகமயம் மற்றும் கல்விக்கு கூடுதல் நிதி ஒதுக்கும் தனது பொறுப்பிலிருந்து அரசு தன்னை விடுவித்துக் கொண்டிருப்பதும் பொதுக்கல்வி முறையை சீர்குலைத்துள்ளதோடு, கல்வி பெறும் வாய்ப்பும், கல்வியின் தரமும் வேகமாக சீரழிந்துள்ளது.

2.4. அனைவருக்கும் கல்வி வழங்குவதை உறுதிபடுத்த வேண்டியது அரசின் கடமை என்பது இந்திய மாணவர் சங்கத்தின் அழுத்தமான கருத்தாகும். கடந்த நூற்றாண்டின் இறுதிக்கட்டத்தில் நவீன தாராளமய சீர்திருத்தங்கள் மிக ஆழமாக அமலாக்கத் துவங்கியது முதல் கல்வியை பரவலாக்கும் தனது பொறுப்பை அரசு விலக்கிக் கொண்டிருக்கிறது. அரசின் இத்தகைய தோல்வியால், கல்விக்கட்டணம், சேர்க்கை நடைமுறை, மற்றும் ஜனநாயக உரிமை மீது கடுமையான பாதிப்பை ஏற்படுத்திய தனியார் கல்வி நிறுவனங்கள் தேசமெங்கும் காளான்களைப்போல் பெருகியுள்ளனர். இந்த எதார்த்த நிலையின் பின்னணியில்தான் உயர்கல்வி வழங்குவதில் அரசு தனது முழு பொறுப்பை நிறைவேற்றிட வேண்டும் என்றும், தனியார் கல்வி நிறுவனங்கள் மீதான குறிப்பாக அவற்றின் சேர்க்கை, நடைமுறை கல்விக் கட்டணம் மற்றும் பாடத்திட்டம் ஆகியவற்றின் மீது சமூகத்தின் கட்டுப்பாட்டை  உறுதிப்படுத்தும் நடைமுறைகளை உருவாக்கிட வேண்டும் என்றும், இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்துகிறது.

2.5. தற்போது நடைமுறையில் உள்ள கல்விமுறை, நமது நாட்டின் மனிதவளத்தையும், பெருவாரியான இயற்கை ஆதாரங்களையும் மேலும் வளர்தெடுத்து நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்கும் ஆற்றல் இல்லாததாக இந்திய மாணவர் சங்கம் விமர்சிக்கிறது. பாடத்திட்டத்தில் உள்ள காலனி ஆதிக்க குணாம்சங்கள் சற்றும் குறையாமல் இன்னும் மாற்றப்படமால் தொடர்கிறது. மேலும் கல்விக்கான கொள்கைகள் வகுப்பதில் மத்திய ஆட்சியாளர்கள் தன்னிச்சையாக அதிக அதிகாரத்தை எடுத்துக்கொள்ள முயற்சிப்பதன் மூலம், நமது நாட்டின் கூட்டாட்சி முறையை மத்திய அரசு தொடர்ந்து சீரழித்து வருகிறது, கல்வி சமூகத்தின் ஜனநாயக உரிமைகள் மீது குறிப்பாக மாணவர்களின் உரிமைகள் மீது தாக்குதல் நடத்துவது சாதாரணமாக ஆகிவிட்டது. நாடு முழுவதும் உள்ள மாணவர்களின் அடிப்படை உரிமையான சங்கம் சேரும் உரிமைகள் மற்றும் தங்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் உரிமை பறிக்கப்பட்டு வரும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்கு எதிரான மாணவர் போராட்டங்கள் கடும் அடக்குமுறை மூலம் ஒடுக்கப்படுவதையும், அடிக்கடி நாம் காண்கிறோம்.

2.6.  நாட்டின் வேலை வாய்ப்பு நிலவரம் மோசமாக சீரழிந்து வருவதால், இளைஞர்களின் எதிர்காலம் மிகவும் அபாயகரமான சிக்கலுக்கு உள்ளாகியுள்ளது. தனியார் தொழிற்சாலைகள் மற்றும் சேவைத்துறை ஆகியவற்றில் குறிபிடத்தக்க அளவில் வேலை வாய்ப்புகள் இல்லை. அரசு பொதுத்துறை நிறுவனங்களில் வேலை வாய்ப்புகளைக் கொடுப்பதை முற்றிலும் நிறுத்திக் கொண்டன. இதன் காரணமாக, வேலை வாய்ப்பு, வளர்ச்சி சுருங்கி விட்டது. வேலை கிடைக்காத இளைஞர்கள் குறிப்பாக படித்த இளைஞர்களின் எண்ணிக்கை மேலும் மேலும் பெருகி வருவது, இந்த சமூகம் கல்விக்காக செய்த மிகப்பெரும் முதலீடு வீணாகிக் கொண்டிருக்கிறது என்பதையே காட்டுகிறது.

2.7. கல்வி மற்றும் அதன் வளர்ச்சி தொடர்பான பிரச்சினைகள் அல்லது வேலையின்மை நெருக்கடியை ஒட்டுமொத்த சமூக பொருளாதார நிலைமையின் பின்னனியிலிருந்து பிரித்து தனித்துப் பார்க்கக்கூடாது. ஒருபுறம்    நிலப்பிரபுத்துவ உறவுகள், மறுபுறம் ஏகாதிபத்திய மூலதனத்தின் மேலாதிக்கம் என இரண்டும் நமது நாட்டின் தொழில்மயமாகும் வேகத்தை தடுத்துள்ளன. நிலச்சீர்த்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பாடாத காரணத்தால், விவசாயத்திலிருந்து கிடைக்கும் வருமானம் தொடர்ந்து ஒரு சிலரிடம் மட்டுமே போய்விடுகிறது. இதன் விளைவாக தொழிற்சாலை உற்பத்திப் பொருள்களுக்கு மிக அதிகமான, வலுவான தேவை உருவாக்கவில்லை. இதனைத் தொடர்ந்து தொழில்மய நடவடிக்கைகள் தேங்கிவிட்டன. ஏகபோகம் மற்றும் அந்நிய மூலதனம் ஆகியவை ஏற்கனவே நாட்டில் இயங்கிக் கொண்டிருக்கிற சிறுதொழில்களை சீர்குலைத்துவிட்டனர். இத்தகைய தடை காரணமாக சீரான தொழில்மயமாகும் நடவடிக்கைகள் ஒருபோதும் நடைபெறவில்லை. புதிய வேலை வாய்ப்பும் உருவாக்கவில்லை. மனித சக்தியை பயன்படுத்தும் விதத்திலான செறிவு மிக்க தேவையும் ஏற்படவில்லை. பொருளாதாரத்தில் பயிற்சி அளிக்கப்பட்ட மற்றும் கற்றுத் தேர்ந்த தொழிலாளர்களுக்கான தேவை நின்று போனதால் கல்வித்துறையில் அடுத்தக்கட்ட விரிவாக்க நடவடிக்கையோ, முன்னேற்றமோ ஏற்படாமல் தேங்கிவிட்டது. தொழில் மற்றும் விவசாயத்தில் ஏற்படும் உண்மையான வலுவான பொருளாதார முன்னேற்றமே வேலை வாய்ப்பு, கல்வி மற்றும் ஒட்டு மொத்த செழிப்பின் விரிவாக்கத்திற்கு மிக அடிப்படையாகும். இந்த புரிதலின் வெளிச்சத்தினால் தான் நமது நாட்டில் வேலை வாய்ப்பு பெருக்கத்திற்கும் கல்வியின் உறுதியான விவாக்கத்திற்கும் வளர்ச்சிக்கும் ஏகபோக மற்றும் ஏகாதிபத்திய கூட்டை ஒழித்துக்கட்டுவதும் நிலச்சீர்திருத்ததை மேற்கொள்ளுவதும் தலையாய கடமையாகிறது.

2.8. ஒரு நாட்டின் அறிவு சுயசார்பை உறுதிபடுத்துவதில் அந்நாட்டின் உயர்கல்வி நிறுவனங்கள் முக்கியப் பங்காற்றுகின்றன. எந்த ஒரு நாட்டிலும் அதன் இறையாண்மையும் சுயசார்பையும் பாதுகாப்பதில் அந்நாட்டின் உயர்கல்வி நிறுவனங்களின் சுதந்திரமான சிந்தனையும், இயற்கை மற்றும் சமூக அறிவியல்கள் தொடர்பான சுதந்திரமான ஆராய்ச்சிகளும் முக்கிய பங்கினையாற்றுகின்றன. மூன்றாம் உலக நாடுகளின் அறிவு சுதந்திரத்தின் மீது தங்களது ஆதிக்கத்தை நிலை நிறுத்திக்கொள்ளும் ஏகாதிபத்திய சாதியின் ஒரு பகுதியே கல்வியின் மீதான உலகமயத்தின் தாக்குதலாகும். இன்றைய கல்விமுறையை முற்றிலும் சீரமைக்க வேண்டிய அவசியத் தேவை ஏற்பட்டுள்ளதை இந்திய மாணவர் சங்கம் உணர்கிறது. அனைவருக்கும் அனைத்து மட்டத்திலும் கல்வி பெறும் சமவாய்ப்பு உறுதிபடுத்திட வேண்டும். நாடு மற்றும் நாட்டு மக்களின் வேகமான முன்னேற்றத்திற்கு உதவும் விதத்தில் மாணவர்களின் தனித் திறமைகளை வளர்த்தெடுத்து, பயன்படுத்தும் வகையில் ஒரு அறிவியல் பூர்வமான, ஜனநாயகப் பூர்வமான கல்விமுறை அமைய வேண்டும் என இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்துகிறது.

2.9. சோவியத் யூனியன் மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் சோசலிச ஆட்சி முறைக்கு ஏற்பட்ட பின்னடைவு, அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியம் தனது பொருளாதார ஆட்சியில் மற்றும் இராணுவ சக்தியை தீவிரமாக பயன்படுத்தி உலகில் மேலாதிக்கம் செலுத்த வழிகோலியுள்ளது. உலகமயத்தின் ஒரு பகுதியான புதிய பொருளாதார சீர்திருத்தங்களின் சுரண்டல் தன்மையை நாம் புரிந்து கொள்வதிலிருந்து நமது கவனத்தை திசைதிருப்பவும், தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்திக் கொள்ளவும், ஏகாதிபத்தியம் திட்டமிட்ட போர்களை நடத்தி வருகின்றது. ஏராளமான பெரும் எண்ணிக்கையிலான அணு ஆயுதங்களை தன்வசம் வைத்திருக்கும் அமெரிக்கா ஐக்கிய நாடுகள் சபை போன்ற பன்முகப்பட்ட சர்வதேச விதிமுறைகளையும் உடன்பாடுகளையும் கூட அவமதித்து வருவதோடு அப்பட்டமான இராணுவ ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இத்தகைய ஏகாதிபத்திய மேலாதிக்கத்திற்கு எதிரான போராட்டங்களை  நடத்தி வரும் முற்போக்கு சக்திகளுக்கும், உலகில் சுதந்திரம், ஜனநாயகம், எல்லைப்புற ஒருமைப்பாடு, நாட்டின் விடுதலை மற்றும் சோசலிசம் ஆகியவற்றிற்காக போராடி வரும் சக்திகளுக்கும், தனது சகோதர ஆதவை தெரிவிக்கும் இந்திய மாணவர் சங்கம் அணுஆயுத அழிப்பு மற்றும் உலக அமைதி ஆகியவற்றில் மிக ஆழமான உறுதியை கொண்டுள்ளது என்பதனை பிரகடனம் செய்கிறது. மேலும் இந்திய மாணவர் சங்கம் மனிதகுலத்தின் முதல் பெரும் எதிரி அமெரிக்க ஏகாதிபத்தியமே என கண்டனம் செய்கிறது. இந்த ஏகாதிபத்திய  சக்தியை வேரோடும் வேரடி மண்ணோடும் வீழ்த்துவதற்கான போரில் உலகெங்கிலும் உள்ள அனைத்து முற்போக்கு மற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்பு சக்திகளுடன் கைகோர்த்துக் கொள்வோம் என இந்திய மாணவர் சங்கம் பிரகடனம் செய்கிறது.

2.10. ஏகாதிபத்திய உலகமயமாக்கலால் உருவாக்கப்பட்டுள்ள பாதுகாப்பின்மை மற்றும் அச்ச உணர்வு , அடிப்படை வாதிகள் மற்றும் இனவெறி சக்திகளின் வளர்ச்சிக்கு தூண்டுகோளாக அமைந்துள்ளது. இத்தகைய சக்திகள் பொது மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்கும் தன்மையை கொண்டிருப்பதால் ஏகாதிபத்தியத்தின் ஆதரவை தொடர்ந்து பெற்று வருகின்றன. ஏகாதிபத்திய அடக்குமுறை என்பது வேறொன்றும் அல்ல, அரசு பயங்கரவாதமே ஆகும். இந்த சக்திகள் மக்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்து விடுவதை ஒன்றுக்கொன்று நியாயப்படுத்தி கொள்கின்றன. பயங்கரவாதத்தை  எதிர்த்து நடவடிக்கை என்ற பெயரில் அரசே மக்களின் ஜனநாயக உரிமைகளை பறிப்பதை இந்திய மாணவர் சங்கம் உறுதியுடன் எதிர்க்கிறது. இந்திய மாணவர் சங்கம் நமது நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டைப் பாதுகாக்கும். இது மாணவர் மற்றும் மக்களை அணி திரட்டுவதன் மூலம் மட்டுமே சாத்தியம் என வலுவாக நம்புகிறது.

2.11. நமது நாட்டில் இப்படிப்பட்ட  பிளவுவாத போக்குகளின் அபாயகரமான வெளிப்பாடுதான் சங்பரிவாரின் மதவெறி பாசிசக் கொள்கைகள், கல்வித்துறையில் தங்களின் சொந்த நலனுக்காக மதவெறியை புகுத்திட மதவெறி சக்திகள் முயன்று வருகின்றன. நமது நாட்டின் மதச்சார்பற்ற தன்மையை சீரழிக்கத் தங்களால் இயன்ற அனைத்தையும் செய்து வருகின்றன. மக்களின் நலனுக்கு விரோதமான பெரும்பான்மை மற்றும் சிறுபான்மை மதவெறிச் சக்திகளின் செயல்பாடு ஒன்றையொன்று வளர்க்கவே உதவும் என்று இந்திய மாணவர் சங்கம் உறுதியாக கூறுகிறது.

2.12. தாராளமய கொள்கைகள் அமலாகும் காலம் என்பது மக்களின் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களை அதிகரிக்கும் காலமும் ஆகும். மக்களின் உரிமைகளுக்கு பாதுகாவலாக கருதப்படும் நீதித்துறைக்கூட இந்தக் கொள்கைகளால் கட்டுப்படுத்தப் பட்டுள்ளன. தொடர்ச்சியாக மக்கள் விரோத தீர்ப்புகள் வெளியாவதன் மூலம் இதைப் புரிந்துக்கொள்ளலாம். இத்துடன் நீதித்துறையின் ஒரு பகுதியினரிடம் காணப்படும் ஊழல் நடவடிக்கைகளால் நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கை குறைந்துள்ளது. இருந்தபோதிலும், கோட்பாட்டு ரீதியாக ஏழைகளும், பணக்காரர்களும் நீதியின் முன் சமமானவர்களே. இந்த வகையில், நீதிமுறை என்பது சராம்சத்தில் சுரண்டப்படுகிற வர்க்கத்தின் நலன்களை பாதுகாப்பதாகவே உள்ளது.

2.13. மாணவர் இயக்கமானது தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் இதர முற்போக்கு சக்திகளின் விரிவான ஜனநாயக இயக்கத்தின் ஒரு ஒருங்கிணைந்த பகுதி ஆகும். நாட்டின் அனைத்து முற்போக்கு ஜனநாயக சக்திகளும் இணைந்து சக்தி மிக்க போராட்ட முயற்சிகளை மேற்கொள்ளாமல் மாணவர் இயக்கம் தனது உடனடி கோரிக்கைகளையோ, அதன் இலக்குகளையோ, நோக்கங்களையோ சாதித்துவிட முடியாது. சமத்துவ சமுதாயம் உருவாதற்கு, நாட்டின் அனைத்து ஜனநாயக சக்திகளின் ஒன்றிணைந்த போராட்டத்தின் அவசியத்தை தனது ஊழியர்களுக்கு கற்பிப்பதோடு, விரிவான மாணவர் திரளிடையே பிரச்சாரம் செய்யும் பணியையும் இந்திய மாணவர் சங்கம் நிறைவேற்றும். அதேபோல தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் ஒத்துழைப்பையும் ஆதரவையும் கோருகிற இந்திய மாணவர் சங்கம், அவர்களது ஜனநாயக இயக்கங்களுக்கும், கோரிக்கைகளுக்கும் தனது ஆதரவை தெரிவித்துக் கொள்கிறது. மேலும் இந்திய மாணவர் சங்கம் தொழிலாளர்கள், விவசாயிகள், பெண்கள், தலித்துகள் மற்றும் பழங்குடியின மக்கள் ஆகியோர் மீதான ஒடுக்கு முறையையும், அனைத்துவிதமான சுரண்டலையும் எதிர்த்து உரத்த குரல் எழுப்புகிறது.

2.14. ஒரு முற்போக்கு கண்ணோட்டம் உடைய மாணவர் அமைப்பு என்கிற முறையில் இந்திய மாணவர் சங்கம் விஞ்ஞான பூர்வமான சோசலிசம் என்றால் என்ன? என்பது குறித்தும், அதை அடைவதற்கு சரியான வழிமுறை என்ன என்பது குறித்தும் சுதந்திரமான, வெளிப்படையான விவாதங்கள் நடப்பதை வரவேற்கிறது; அதில் ஆர்வம் கொண்டிருக்கிறது. இந்த விதத்தில் இந்திய மாணவர் சங்கம், பரந்து விரிந்த அளவிலான மாணவர்களின் வெகுஜன அமைப்பு என்றும், அரசியல் கட்சி அல்ல என்றும் தெளிவுப்படுத்துகிறது. மாணவர் சமூகத்தின் முன்னேற்றத்திலும், வளர்ச்சியிலும் பெரும் அக்கறை கொண்டிருக்கிறது என்றும், சுதந்திரமான அறிவியல் பூர்வமான, முற்போக்கான, ஜனநாயகப் பூர்வமான, மதச்சார்பற்ற தன்மையோடு கூடிய மிகவும் பெருமைப்பட்டுக் கொள்ளத்தக்க தனது ஸ்தாபனத்தை பாதுகாக்கும் என்று இந்திய மாணவர் சங்கம் பிரகடனம் செய்கிறது.

இலக்குகளும் நோக்கங்களும் :

3.1. மாணவர் சமூகத்தின் உயர்வுக்கும், முன்னேற்றத்திற்கும் வழிவகுக்கும் விதத்தில் ஒரு சக்திமிகுந்த  கட்டுக்கோப்பான மாணவர் இயக்கத்தை கட்டுவதற்கு பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள் மற்றும் நாட்டின் இதர கல்வி நிலையங்களில் பயிலும் மாணவர்களையும், வெளிநாடுகளில் படிக்கும் இந்திய மாணவர்களையும் தனது பதாகையின் கீழ் அணிதிரட்டும் நோக்கத்தை இந்திய மாணவர் சங்கம் கொண்டுள்ளது.

 

3.2. முதலாளித்துவ ஏகபோகம் மற்றும் சர்வதேச நிதி மூலதனத்தின் ஆதிக்கம் ஆகியவற்றை ஒழித்துவிட்டு, விரிவான நிலச் சீர்திருத்தத்தை அமல்படுத்துவதன் முலம் எல்லோருக்கும் கல்வி! எல்லோருக்கும் வேலை! என்ற இலக்கை உத்தரவாதப்படுத்தும் ஒரு ஜனநாயக அறிவியல் பூர்வமான, முற்போக்கான கல்வி முறையை உருவாக்க இந்திய மாணவர் சங்கம் போராடும். இந்த இலக்கினை அடைய தொழிலாளர், விவசாயிகள் நடத்தும் விரிவான ஜனநாயக இயக்கங்களில் மாணவர் சமூகத்தையும் அணிதிரட்டி இந்திய மாணவர் சங்கம் போராடும்.

 

3.3. இந்திய மாணவர் சங்கம் அனைத்து விதமான சுரண்டல்களில் இருந்தும் விடுதலை பெற்ற சமூகத்தை உருவாக்கப் போராட உறுதி கொண்டுள்ளது. இந்த அடிப்படையில், தொலைநோக்கு பார்வை கொண்ட முற்போக்கு மாணவர் அமைப்பு என்ற வகையில் சுதந்திரம், ஜனநாயகம், சோசலிசம், என்ற பதாகையை உயர்த்திப் பிடிக்கிறது. நாடு மற்றும் நாட்டு மக்களின் நலனுக்கு விரோதமான போக்குகளையும், மனப்பான்மையையும் எதிர்த்து இந்திய மாணவர் சங்கம் கடுமையாகப் போராடும்.

 

3.4. முழுமையான அர்த்தமுள்ள கல்வியைப் பெறுவதற்கான அனைத்து அடிப்படை வசதிகளும் மாணவர்களுக்கு கிடைப்பதை உறுதிப்படுத்தும் விதத்தில் இந்திய மாணவர் சங்கம் தொடர்ந்து பணியாற்றும். முழுமையான அர்த்தமுள்ள கல்வி என்பது விடுதி வசதி, நூலகம் மற்றும் ஆய்வுக்கூட வசதி, விளையாட்டு வசதி, உடற்கல்வி, கலாச்சாரம் மற்றும் பொழுதுபோக்கு நடவடிக்கைகள் மற்றும் இதர கல்வி சார்ந்த சமூக நடவடிக்கைகள் இவை அனைத்தும் அடங்கியதே ஆகும். இத்தகைய கல்வி போதுமான அளவு அனைத்து மாணவர்களுக்கும் சென்றடைய வேண்டும். மேலும், இந்திய மாணவர் சங்கம் மாணவர்கள் முழுமையான ஜனநாயக உரிமைகளை அடைவதற்காக தொடர்ந்து போராடும். மாணவர்கள் தங்களது சுயேச்சையான கருத்துக்களை வெளிப்படுத்தவும், சுயேச்சையான நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்குமான ஜனநாயக உரிமைகளுக்காக போராடும், மாணவர் பேரவை, சங்கங்கள் அமைக்க, கூட்டம் கூட, கல்வி நிறுவனங்களின் நிர்வாகங்களில் பங்கேற்க, கல்வி மற்றும் மாணவர் பருவம் தொடர்பான இதர விவகாரங்கள் சார்ந்த அனைத்து நடவடிக்கைகளிலும் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள மாணவர்களுக்கும் உரிமை உண்டு. இந்த ஜனநாயக உரிமைகளுக்காக இந்திய மாணவர் சங்கம் தொடர்ந்து போராடும். மேலும் மாணவர்களிடையே சுயக்கல்வி மற்றும் சுயஒழுக்கம் ஆகிய பண்புகளை வளர்த்து மேலும் மேலும் அவர்களை அறிவுப் பூர்வமானவர்களாக முன்னேற்றுவதற்கு இந்திய மாணவர் சங்கம் உறுதி மேற்கொண்டுள்ளது. இந்திய மாணவர் சங்கம் ஆசிரியர், ஆசிரியர் அல்லாத அலுவலர்கள், பாதுகாவலர்கள், மாணவர்கள் மற்றும் கல்வி சமூகத்தின் இதர பிரிவினர் ஆகியோரிடையே மிக நெருக்கமான உறவை வளர்க்கவும், பரஸ்பரம் புரிந்து கொள்ளலை ஏற்படுத்தவும் உறுதி பூண்டுள்ளது. மாணவர்களுக்கும், கல்வி சமூகத்தின் இதர பிரிவினருக்கும் இடையேயான உறவை சீர்குலைக்கும் எந்த ஒரு முயற்சியையும் இந்திய மாணவர் சங்கம் தயங்காமல் எதிர்த்து நிற்கும். மேலும் மாணவர் சமூகத்தை இதர ஜனநாயக சக்திகள் மற்றும் அடித்தட்டு மக்களிடமிருந்து தனிமைப்படுத்த எடுக்கப்படும் அனைத்து முயற்சியையும் இந்திய மாணவர் சங்கம் கடுமையாக எதிர்க்கும்.

 

3.5. மாணவர் சமூகத்தினர் மானுடம் மற்றும் பல்வேறு அறிவியல்கள் குறித்தும் ஆழமாக கற்றறிந்து தங்களின் அறிவை மேலும் செறிவாக்கிக் கொள்ளும் கடமையைச் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்துகிற அதே நேரத்தில் அரசியல் மற்றும் சமூக ஞானமும், பிரக்ஞையும் கொண்டவர்களாக தங்களை உயர்த்திக் கொள்ள வேண்டுமெனவும் இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்துகிறது. இவ்விதமாக பள்ளியிலிருந்தோ, கல்லூரியிலிருந்தோ வெளியேறும் போது மாணவர்கள் மிக வேகமாக மாறி வரும் இந்த சமூகத்தின் பொறுப்புமிக்க குடிமக்களாக சரியான திசை வழியில் தங்களது பங்களிப்பை செலுத்தும் விதத்தில் தங்களை முழுமையாக தயார் செய்ய வேண்டும்.

 

3.6. மதம், ஜாதி, பாலினம், மொழி மற்றும் இன வேறுபாடின்றி அனைவரும் சமம் என்பதற்கான போராட்டத்தை இந்திய மாணவர் சங்கம் நடத்தும். இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக சாதி, மத, மொழி, இனம், பெண் மற்றும் மலைவாழ் மக்கள் என்ற அடிப்படையில் ஒடுக்கப்படுகிற மக்களின் மேம்பாட்டிற்காகவும் போராட இந்திய மணவர் சங்கம் உறுதி பூண்டுள்ளது. மேலும் மொழி ரீதியான இனக்குழு ரீதியான, இன ரீதியான, மத ரீதியான இதர சிறும்பான்மை மக்களின் உரிமைகளை பாதுகாக்கவும் இந்திய மாணவர் சங்கம் போராடும். நமது நாட்டில் சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்கள் நடத்தவும் நிர்வகிக்கவும் அரசியல் அமைப்புச் சட்டம் கொடுத்துள்ள உரிமையை இந்திய மாணவர் சங்கம் வரவேற்கிறது. எனினும், இந்த கல்வி நிறுவனங்கள் இலாபம் சம்பாதிக்கும் வணிக நோக்கத்தில் செயல்படாமல் இருப்பதையும் பகுத்தறிவுக்கு ஒவ்வாத மற்றும் அடிப்படைவாத சித்தாந்தத்தை பரப்பும் நோக்கில் தவறாக பயன்படுத்தப் படாமல் இருப்பதையும் உறுதி செய்திட வேண்டும்.

 

3.7. மதச்சார்பின்மை கொள்கையில் இந்திய மாணவர் சங்கம் உறுதியாக நிற்கிறது. மேலும் அரசு மற்றும் அரசியலில் இருந்து மதம் முழுமையாக பரிக்கப்பட வேண்டும் என்று வலியுத்துகிறது. மத அடிப்படைவாதத்தின் அனைத்து வடிவங்களையும், மதவெறியையும் மததுவேசத்தையும் இந்திய மாணவர் சங்கம் சமரசம் இன்றி எதிர்க்கிறது. மேலும், மதவாத வன்முறையின் அனைத்து வடிவங்களையும், பயங்கரவாதத்தையும், குறிப்பாக மதவாத பாசிசத்தையும் எதிர்த்து இவ்வமைப்பு போராடும். மாணவர் சமூகத்தை பிரிப்பதன் மூலம் மதவாத சக்திகள் அவர்களது கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கான உரிமை போராட்டங்களைப் பலவீனப்படுத்த முயற்சிக்கின்றன. இப்படி மதரீதியிலும், இனரீதியிலும் மாணவர்களின் ஒற்றுமையை நிர்மூலமாக்க மதவெறி சக்திகள் மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளையும் இந்திய மாணவர் சங்கம் முறியடிக்கும். மேலும் மதநல்லிணக்கம், தேசஒற்றுமையை வலுப்படுத்தி மதவெறி தேசவிரோத சக்திகளுக்கு எதிராக மக்களை  திரட்டும் பணியிலும் ஈடுபடும்.

 

3.8. அனைத்து விதமான பாலின சுரண்டலையும், வாழ்வின் ஒவ்வொரு பகுதியிலும் இந்திய மாணவர் சங்கம், உறுதியுடன் எதிர்க்கிறது. பழைய தீய மரபுகளான உடன்கட்டை ஏறுதல் மற்றும் வரதட்சணை போன்றவை இன்றும் தொடர்வது நமது நாட்டின் பெண்களது மோசமான நிலைமையை அம்பலப்படுத்துகிறது. நிலப்பிரபுத்துவ உறவுகள் மற்றும் பழமைவாத கருத்துக்களின் அடிப்படையில் உருவான, அனைத்து விதமான ஆணாதிக்க மரபுகள் மற்றும் நடைமுறைகளை எதிர்த்து போராட இந்திய மாணவர் சங்கம் உறுதி பூண்டிருக்கிறது. முதலாளித்துவத்தால் பெண்கள் கேவலமான நுகர்வுப்பொருளாக சித்தரிக்கப்படுவதையும் எதிர்க்கிறது. பெண்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட வேண்டும் என்றும் கல்வி பெறுவதில் போராடும். ஒரு முற்போக்கான மற்றும் பாலின சமத்துவத்தையும், மாண்புகளையும் போதிக்கிற பாடத்திட்டம் உருவாக்கப்பட வேண்டும் எனவும் எஸ். எப். ஐ வலியுறுத்துகிறது.

 

3.9. இந்திய மாணவர் சங்கம் சாதிய பாகுபாடு மற்றும் ஒடுக்குமுறையின் அனைத்து வடிவங்களையும் மிகத்தீர்மானமாக எதிர்க்கிறது. தீண்டாமை எனும் மனிதத் தன்மையற்ற செயலையும், அனைத்து விதமான சமூக ஒடுக்குமுறைகளையும் களைந்திட எஸ்.எப்.ஐ உறுதியேற்கிறது. சாதிய முறையை ஒழிக்கவும், அது போராடும். தலித்துகள், ஆதிவாசிகள் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட சாதிகளையும், சமூகங்களையும், சேர்ந்தவர்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் இடஒதிக்கீடு கொடுப்பதை இந்திய மாணவர் சங்கம் ஆதரிப்பதோடு, இந்த இட ஒதுக்கீடு தனியார் துறைக்கும் விரிவுபடுத்த வேண்டும் என வலியுறுத்துகிறது. மேலும் பொருளாதார ரீதியில், பிராந்திய ரீதியில், பாலின ரீதியில் பிற்பட்டவர்களுக்கும், இட ஒதுக்கீடு   கொடுப்பது குறித்து கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் தற்போது நடைமுறையில் உள்ள இட ஒதுக்கீடு முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்று உடல் ஊனமுற்றவர்கள் உள்ளிட்ட இதர பலகீனமான பிரிவினருக்கும் இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்றும் இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்துகிறது.

 

3.10. இந்திய மாணவர் சங்கம் மொழி, பிராந்திய, மாகாண அல்லது இனக்குழு ரீதியிலான குறுகிய, பிளவுவாத, ஆதிக்க மனோபாவத்தைக் கடுமையாக எதிர்க்கிறது. நமது நாட்டின் தேசிய ஒற்றுமையை பாதுகாக்கவும், சமநிலை வளர்ச்சியை உறுதிபடுத்திடும் வகையில், மத்திய, மாநில அரசுகளிடையே ஜனநாயகப் பூர்வமான அதிகார மறுப்பகிர்வு செய்வதோடு, அதிகாரம் பரவலாக்கப்பட வேண்டும் என்றும் இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்துகிறது. மேலும் இந்திய ஒன்றியத்தின் பிராந்திய ஒற்றுமையை வலுப்படுத்தும் விதத்தில் பல்வேறு தேசிய இனங்களின் பொருளாதார ரீதியான மற்றும் கலாச்சார ரீதியான வளர்ச்சிக்கான நடவடிகைகளை முழுமையாக ஆதரிக்கிறது. அரசாங்கத்தின் சர்வாதிகார கொள்கைகளுக்கும் அடக்குமுறை கொள்கைகளுக்கும் எதிராக நடக்கும் இம்மக்களின் நியாயமான ஜனநாயக போராட்டங்களுக்கு இந்திய மாணவர் சங்கம் தனது முழுமையான ஆதரவை தெரிவித்துக் கொள்கிறது.

 

3.11. இலாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு சமூகம் சார்ந்த பின் விளைவுகளை திட்டமிடாமல் கட்டுப்பாடற்ற முறையில் அமல்படுத்தப்படும் முதலாளித்துவ வளர்ச்சிப்பாதை காரணமாக சுற்றுச் சூழலுக்கு பெறும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இத்தகைய அழிவிலிருந்து சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், நிலத்தன்மையை பாதுகாக்கவும், சுற்றுச்சூழல் ஆதரவு வளர்ச்சிக்காகவும் முற்போக்கு மக்கள் இயக்கங்களுடன் இணைந்து போராட இந்திய மாணவர் சங்கம் உறுதி கொண்டுள்ளது.

 

3.12. நமது நாட்டின் கலாச்சாரப் பன்முகத்தன்மை பல்முனைத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. ஒரு பக்கம் சந்தை சார்ந்த நுகர்வு மதிப்பீடுகள் நமது கலாச்சார அடித்தளத்தின் மீது தாக்குதல் தொடுத்துள்ளன. மறுபக்கம்  “கலாச்சார தேசியவாதம்” என்ற பெயரில் மனுதர்ம கலாச்சார மேலாதிக்கத்தை திணிக்க மதவெறி சக்திகள் முயற்சித்துக் கொண்டிருக்கின்றன. நமது பன்முகத்தன்மை வாய்ந்த கலாச்சாரத்தை சீர்குலைக்க நடக்கும் அனைத்து முயற்சிகளையும் இந்திய மாணவர் சங்கம் கடுமையாக எதிர்த்து நிற்கும். அதே நேரத்தில் காலனிய நிலப்பிரபுத்துவ கலாச்சாரத்தின் அனைத்து விதமான தாக்கங்களையும் இந்திய மாணவர் சங்கம் முழுமையாக நிராகரிக்கிறது. மேலும் நவீன , அறிவியல் பூர்வமான, முற்போக்கான மற்றும் மனிதாபிமான மாண்புகள் சார்ந்த மக்கள் கலாச்சாரத்தை வேகமாக வளர்த்தெடுக்க இந்திய மாணவர் சங்கம் உறுதி மேற்கொண்டிருக்கிறது.

 

3.13. இந்திய மாணவர் சங்கம், பழங்குடியின குழுக்களை சேர்ந்த மக்களின் அடையாளம், மொழி மற்றும் கலாச்சாரத்தை பதுகாக்க வேண்டும் என வலியுறுத்துகிறது. மேலும் இந்த மக்கள் மீதான சுரண்டலுக்கு எதிராகவும், உடைமைகள் பறித்தலை எதிர்த்தும், போராட இந்திய மாணவர் சங்கம் உறுதி ஏற்கிறது. அதே நேரத்தில் பழங்குடியின மக்களின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும், அவர்களை பொதுவான சமூக வாழ்வோடு ஒருங்கிணைக்கவும் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளும். பழங்குடியின மக்களின் உரிமைகளை பாதுகாப்பதன் மூலம் அவர்களது ஒருமைப்பாடு, நலன், கல்வி வளர்ச்சி ஆகியவற்றிற்கு இந்திய மாணவர் சங்கம் போராடும். இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 5 மற்றும் 6 வது அட்டவணையின்படி பழங்குடியின மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். குறிப்பாக, ஏகாதிபத்திய உலகமயமாக்கலின் தாக்குதல் அதிகரித்துள்ள இந்த தருணத்தில் அது மிகவும் அவசியம்.

 

3.14. நாட்டு மக்களின் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் விதத்தில் நமது நாட்டில் வெகுஜன ஜனநாயக இயக்கத்தை வலுப்படுத்த இந்திய மாணவர் சங்கம் உறுதிபூண்டுள்ளது. நாட்டு மக்களிடையே ஜனநாயக எண்ணம் மேலும்  வளர்வதற்கு பெரும் தடையாக நிலப்பிரபுத்துவ, சாதிய பிடிப்பும், மத ரீதியான சடங்குகளும், நடவடிக்கைகளும் உள்ளன. இவற்றிற்கு எதிரான தீவிரவாத சமூக சீர்த்திருத்த இயக்கத்தில், துன்ப துயரங்களுக்கு உள்ளாகியுள்ள மிகப் பெருவாரியான உழைப்பாளி மக்கள் மத்தியில் ஜனநாயக மற்றும் முற்போக்கு சக்திகளுடன் இணைந்துப் போராடுவதை இந்திய மாணவர் சங்கம் தனது மிக முக்கியமான கடமையாக கருதுகிறது.

3.15. ஏகாதிபத்திய எதிர்ப்பு, ஜனநாயகம்  மற்றும்  சோசலிச கருத்துகளால் ஆகர்சிக்கப்பட்டுள்ள இயக்கம் என்ற முறையில் இந்திய மாணவர் சங்கம், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் வாழ்வின் அனைத்து பகுதிகளையும், ஆக்கிரமித்துள்ள ஏகாதிபத்திய உலகமயமாக்கலை வீழ்த்துவதற்கு உறுதி ஏற்றுள்ளது.மேலும் நமது நாட்டு மக்களின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் மதவெறி மற்றும் பிளவுவாத  சக்திகளிடமிருந்து பாதுகாக்கவும் இந்திய மாணவர் சங்கம் உறுதி கொண்டுள்ளது. உலகில் ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பிற்கு எதிராக சுதந்திரம், விடுதலை, பிரதேச ஒருமைப்பாடு. ஜனநாயகம், சோசலிசம், ஏகாதிபத்திய ஆகிரமிப்பிற்கு எதிர்ப்பு  ஆகியவற்றிற்காக போராடும் அனைத்து முற்போக்கு சக்திகளுக்கும் தனது சகோதர ஆதரவை இந்திய மாணவர் சங்கம் தெரிவிக்கிறது. மேலும் உலகெங்கிலும் உள்ள முற்போக்கு, ஜனநாயக மற்றும் சோசலிச சக்திகளுடன் இணைந்து பணியாற்றவும், ஏகாதிபத்தியத்திற்கு எதிராக உலக அமைதி, சுதந்திரம், ஜனநாயகம், சோசலிசம் ஆகியவற்றை பாதுகாப்பதற்காக சக்தி மிக்க சர்வதேச மாணவர் இயக்கத்தைக் கட்டி வளர்க்கவும்  இந்திய மாணவர் சங்கம் உறுதி ஏற்கிறது.

3.16. சுதந்திரம், மதச்சார்பின்மை, ஜனநாயகம், சமாதானம் மற்றும் சோசலிசம் ஆகியவற்றிற்காக பணியாற்றி வரும் அனைத்து மாணவர் – இளைஞர் அமைப்புகள் மற்றும் இதர கல்வி சமூகத்தினரிடம் சகோதர ரீதியான மற்றும் நட்பு ரீதியான உறவுகளை கொண்டிருக்கிறது. குறிப்பிட்ட பிரச்சினைகள் மற்றும் கோரிக்கைகளுக்காகவும், மாணவர்களின்  குறைகளை  தீர்ப்பதற்கான நடவடிக்கைகளிலும் கூட்டாகக் கைக்கோர்த்து பணியாற்ற விரும்பும் மேற்கூறிய நோக்கம் கொண்ட அனைத்து அமைப்புகளோடும் இணைந்து பணியாற்ற இந்திய மாணவர் சங்கம் தயாராக உள்ளது.

3.17. மாணவர் சமூகத்தின் முன்பு இந்த விரிவான திட்டத்தை முன்வைக்கும் இந்திய மாணவர் சங்கம், மேற்கூறிய , நோக்கங்களை நிறைவேற்றுவதன் மூலம் ஜனநாயக தேசிய முன்னேற்றத்தை ஏற்படுத்த ஆர்வம் கொண்டுள்ள மாணவர்கள் – இளைஞர்கள் – பெண்கள் – நடுத்தர வர்க்கத்தினர் – விவசாயிகள் –தொழிலாளர்கள் மற்றும் அனைத்து முற்போக்கு சக்திகளும் தோளோடு தோள் சேர்ந்து நமது மக்களுக்கு வளமான எதிர்காலத்தை கட்டி அமைக்க முன்வருமாறு மாணவர்களை அறைகூவி அழைக்கிறது.  

அமைப்புச் சட்டம் :

பெயர்:

அமைப்பின் பெயர் இந்திய மாணவர் சங்கம் (எஸ்.எப்.ஐ) என்று இருக்கும்.

இலக்குகள்:

 1. மாணவர் சமூகத்தின் உயர்வுக்கும், முன்னேற்றத்திற்கும் வழிவகுக்கும் விதத்தில், ஒரு சக்திமிக்க, மாணவர் இயக்கத்தை கட்டுவதற்கு பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் நாட்டின் இதர கல்வி நிலையங்களில் பயிலும் மாணவர்களையும், வெளிநாடுகளில் படிக்கும் இந்திய மாணவர்களையும் அணிதிரட்டுவது.
 2. 2. காலனி ஆதிக்கம் விட்டுச் சென்ற தீங்குகளை எதிர்த்து துடிப்புடன் போராடுவது, நமது மக்களின் வளமான முற்போக்கான எதிர்காலத்தை உறுதிபடுத்துவதற்காக, நமது நாட்டில் சுதந்திரம், ஜனநாயகம் மற்றும் சோசலிச சமூகத்தைக் கட்டுவது.
 3. பழமையான முதலாளித்துவ ஏகபோகம் மற்றும் சர்வதேச நிதிமூலதனத்தின் ஆதிக்கம் ஆகியவற்றை ஒழித்து விரிவான நிலச்சீர்த்திருத்தத்தை அமல்படுத்துவதன் மூலம் அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் வேலை என்பதை உத்தரவாதப்படுத்தும் ஜனநாயகப் பூர்வமான, அறிவியல் பூர்வமான, முற்போக்கான கல்வி முறையை நிலைநாட்டுவது.
 4. தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் இதர முற்போக்கு சக்திகள் நடத்தும் விரிவான ஜனநாயக இயக்கங்களில் மாணவர் சமூகத்தை அணிதிரட்டுவது; உடனடி கோரிக்கைகளையும், நோக்கங்களையும் அடைவதற்காக நடத்தப்படும் மாணவர் போராட்டங்களுக்கு அவர்களின் ஒத்துழைப்பையும் ஆதரவையும் பெறுவது.
 5. மாணவர் சமூகத்தின் ஜனநாயக உரிமைகளை நிலைநாட்டிட, ஜனநாயக மற்றும் சுதந்திரமான கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கான உரிமை.

மாணவர் சங்கம் மற்றும் பேரவை அமைத்துக் கொள்வதற்கான உரிமை மற்றும் கூட்டம் கூடுவதற்கான உரிமை.

அனைத்து கல்வி நிறுவனங்கள் மற்றும் மாணவர்களின்  வாழ்க்கையோடு தொடர்புடைய அனைத்து கல்வித்துறை அமைப்புகளின் நிர்வாகங்களிலும் பங்கேற்கும் உரிமை.

 1. உயர்நிலைக்கல்வி வரை அனைவருக்கும் இலவச கட்டாய கல்வி கிடைப்பதற்கும், +2 வரை அனைத்து கல்விக் கட்டணங்களையும் நீக்குவதற்கும் போராடுவது. கல்வி – விடுதி – விளையாட்டு மற்றும் கலாச்சார சமூக நடவடிக்கைகளில், அனைத்து மாணவர்களுக்கும் தேவையான முழுமையான வசதிகள் செய்து கொடுக்கப்படுவதற்காக போராடுவது.
 2. கல்வி முடித்த பின்பு வேலைவாய்ப்பு கிடைப்பதற்கான உத்தரவாதத்திற்காக போராடுவது அல்லது வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும் வரை உதவித்தொகை கேட்டுப் போராடுவது: வேலை செய்யும் உரிமையை அரசியல் அமைப்புச் சட்டத்தில் உத்தரவாதம் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமையாக அங்கீகரிக்குமாறு வலியுறுத்தி போராடுவது.
 3. மதம், ஜாதி, மொழி, இனம், பிராந்தியம் அல்லது பாலின ரீதியிலான சுரண்டல் அல்லது ஒடுக்குமுறையின் எந்தவொரு வெளிப்பாட்டையும் எதிர்த்து போராடுவது மற்றும் மதச்சார்பின்மை, மதநல்லிணக்கம், சமூக அமைதி மற்றும் சமத்துவம் ஆகியவற்றிற்காக பணியாற்றுவது.
 4. உலகில் சுதந்திரம், தேசிய விடுதலை மற்றும் சோசலிசத்திற்காக பணியாற்றும் இதர அனைத்து மாணவர் அமைப்புகளோடும், சகோதர ரீதியிலான, நட்பு ரீதியான உறவுகளை மேற்கொள்வது மற்றும் குறிப்பிட்ட பிரச்சினைகள் மற்றும் கோரிக்கைகளுக்காக இதர மாணவர் அமைப்புகளோடு கூட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வது.

கொடிஅமைப்பின் கொடி வெள்ளை நிற பின்னணியில் இடது மேல் ஐந்து முனை கொண்ட சிவப்பு நட்சசத்திரமும், சுதந்திரம், ஜனநாயகம், சோசலிசம் என சிவப்பு எழுத்துக்களும் பொறிக்கப்பட்டிருக்கும். கொடியின் நீள அகல விகிதம் 3:2 என்ற அளவில் இருக்கும்.   

மாணவர் அமைப்புகள், உறுப்பினர்கள் மற்றும் கிளைகளின் இணைப்பு :

 1. இந்திய மாணவர் சங்கத்தின் திட்டத்தை ஏற்றுக்கொண்ட எந்த ஒரு மாணவர் அமைப்பிற்கும் இந்திய மாணவர் சங்கத்தில் இணைவதற்கு அனுமதி வழங்கப்படும். அந்த மாணவர் அமைப்பு இந்தியாவில் ஒரு மாநிலத்தை சேர்ந்ததாகவோ அல்லது ஒரு மாநிலத்தின் குறிப்பிட்டப் பகுதியை சேர்ந்ததாகவோ இருக்கலாம். அந்த அமைப்பு இந்திய மாணவர் சங்கத்தின் அமைப்பு சட்டத்தை ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பதாக அறிவிக்க வேண்டும். மேலும் அந்த அமைப்பு ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மாணவர்களை பதிவு செய்திருக்க வேண்டும். இந்தப் பதிவு எண்ணிக்கை எவ்வளவு இருக்க வேண்டும் என இந்திய மாணவர் சங்கத்தின் மத்திய நிர்வாகக்குழு முடிவு செய்யும்.
 2. இந்திய மாணவர் சங்கத்தில் இணைய விரும்பும் எந்த ஒரு கிளையும் தன்னை உறுப்பினராக பதிவு செய்து கொள்ள சந்தா தொகையாக கல்வியாண்டு ஒன்றுக்கு ரூபாய். 1 வழங்க வேண்டும். வெளிநாடுவாழ் மாணவர்களின் கிளையாக இருந்தால் ஒரு டாலர் வசூலிக்கப்படும்.மேலும் கிளைகள் தாங்கள் பதிவு செய்யும் ஒரு உறுப்பினரிடம் பதிவு செய்யும் சந்தா தொகையில் 20% இணைப்புக் கட்டணமாக இந்திய மாணவர் சங்கத்தின் நிர்வாகக்குழுவிற்கு செலுத்த வேண்டும்.
 3. இணைப்புக் கட்டணம் தவிர, தன்னை உறுப்பினராக பதிவு செய்து கொள்ளும் ஒவ்வொரு கிளையும் இதர இணைப்பு சங்கங்களும் பதிவுக் கட்டணமாக ரூபாய் 1 செலுத்த வேண்டும். வெளிநாடுவாழ் மாணவர்களின் கிளைகள் மற்றும் அமைப்புகள் பதிவுக் கட்டணமாக ஆண்டுக்கு 1 டாலர் இந்திய மாணவர் சங்கத்தின் மத்திய நிர்வாகக்குழுவிற்கு செலுத்த வேண்டும்.

உறுப்பினர் பதிவு மற்றும் உறுப்பினர்களின் உரிமைகளும் கடமைகளும் :

) இந்திய மாணவர் சங்கத்தின் நோக்கங்களையும், நடவடிக்கைகளையும் ஏற்றுக்கொள்கிற 12 வயது நிரம்பிய அல்லது 6ம் வகுப்பு அதற்கு மேல் படித்துக் கொண்டிருக்கிற, எந்த ஒரு மாணவரும் பாலின, சாதி, மத,மொழி, இன அல்லது பிராந்திய  வேறுபாடு இன்றி சங்கத்தில் உறுப்பினராகலாம். ஒரு உறுப்பினர் ஆண்டுச் சந்தாவாக ரூபாய் 1 அளிக்க வேண்டும். வெளிநாடுவாழ் இந்திய மாணவராக இருந்தால் ஒரு டாலர் சந்தா தொகை செலுத்த வேண்டும். இந்த உறுப்பினர் தகுதி ஒரு கல்வி ஆண்டுக்கு மட்டுமே செல்லத்தக்கது.

இந்திய மாணவர் சங்கத்தின் எந்தவொரு உறுப்பினரும் தன்னுடைய படிப்பை முடித்த பிறகு கூடுதலாக இரண்டு ஆண்டு காலம் தன்னை தொடர்ந்து உறுப்பினராக பதிவு செய்துக்கொள்ளலாம். இந்த காலத்திற்கு பின்பும் கூட சங்கத்தில் உள்ள முன்னாள் மாணவர்களை சங்கத்தின் மாநாடு மத்திய நிர்வாகக்குழுவிற்கோ அல்லது நிர்வாகிகளாகவோ தேர்ந்தெடுக்கலாம்.

) நிர்வாகக்குழு முன்பு தனது கருத்துகளை முன்வைக்கவோ, நிர்வாகக்குழுவை தேர்ந்தெடுக்கவோ நிர்வாகியாக தேர்ந்தெடுக்கபடவோ சங்கத்தின் எந்தவொரு உறுப்பினருக்கும் உரிமை உண்டு.

) ஒரு உறுப்பினருக்கு சங்கத்திலிருந்து ராஜினாமா செய்யும் உரிமை உண்டு.

) பொது மாநாடு மூலம் நிறைவேற்றப்படும் திட்டங்களை அமல்படுத்தும் பொறுப்பு அனைத்து உறுப்பினர்களுக்கும் உண்டு.மேலும் இந்திய மாணவர் சங்கத்தின் நடவடிக்கைகளையும், நோக்கங்களையும் பிரச்சாரம் செய்யும் உரிமை உண்டு.இந்திய மாணவர் சங்கத்தின் பத்திரிக்கையை ஒவ்வொரு உறுப்பினரும் அவசியம் தொடர்ந்து படிக்க வேண்டும்.மேலும் இந்த பத்திரிக்கையை  பிரபலப்படுத்தும் பொறுப்புகளும் ஒவ்வொரு உறுப்பினருக்கும் உண்டு.

) ஸ்தாபனத்திற்காக ஒவ்வொரு உறுப்பினரும் நிதி கொடுக்க வேண்டும்;நிதியை திரட்ட வேண்டும்.

ஒழுங்கு நடவடிக்கை :

) ஸ்தாபனத்தின் அமைப்புச் சட்டத்திற்கோ அல்லது ஸ்தாபன நலன்களுக்கு விரோதமாகவோ ஒரு உறுப்பினரின் நடவடிக்கை அமையும் பட்சத்தில் அந்த உறுப்பினர் எங்கு உறுப்பினராக பதிவு செய்யப்பட்டுள்ளாரோ அங்குள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட குழுவின் மூலம் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

) ஒழுங்கு நடவடிக்கையை எதிர்கொள்ளும் ஒரு உறுப்பினர் சம்பந்தப்பட்ட குழுவின் முன் தனது நிலையை விளக்க உரிமை உண்டு.

) ஒரு உறுப்பினரை அமைப்பிலிருந்து வெளியேற்றுவது என்ற முடிவு சம்பந்தப்பட்ட குழுவிற்கும் மேலே உள்ள உயர்குழுவினால் மேற்கொள்ளப்படலாம். அமைப்பிலிருந்து வெளியேற்றப்பட்ட அல்லது எந்த ஒரு ஒழுங்கு நடவடிக்கையையும் எதிர்கொண்டுள்ள ஒரு உறுப்பினர் சம்பந்தப்பட்ட குழுவிற்கும் மேலே உள்ள உயர்குழுக்களுக்கோ அதைத்தொடர்ந்து மத்திய நிர்வாக குழுவிடமும் மேல் முறையீடு செய்யும் உரிமையை பெற்றிருக்கிறார்.

) ஸ்தாபனத்தின் நோக்கங்களுக்கும், இலக்குகளுக்கும் எதிராகவோ அல்லது ஸ்தாபனத்தின் நலன்களுக்கு எதிராகவோ செயல்படும் எந்த ஒரு கிளையையும் சங்க இணைப்பிலிருந்து வெளியேற்ற மத்திய நிர்வாக குழுவிற்கு அதிகாரம் உண்டு. தங்களின் கீழே செயல்படும் கிளைகள் மீதும் இத்தகைய ஒரு நடவடிக்கை எடுக்கப்பட ஒரு கிளை மத்திய நிர்வாக குழுவிடம் மேல் முறையீடு செய்ய உரிமை உண்டு.

எந்த ஒரு மாநில குழுவையும் அங்கீகாரம் இழக்கச் செய்யும் நடவடிக்கையை மத்திய நிர்வாக குழு மேற்கொண்ட பின்னர் அது அடுத்து நடைபெறும் அகில இந்திய மாநாட்டில் முன் வைத்து ஒப்புதல் பெறப்பட வேண்டும்.

ஸ்தாபனத்தின் கூட்டமைப்பு  :

) மாநாடுகள்

) நிர்வாகக் குழுக்கள்.

) மாநில, மாவட்ட, பகுதி மற்றும் கல்வி நிறுவன அளவிலான இணைக்கப்பட்ட அமைப்புகள்.

ஸ்தாபனமும் அதன் உரிமைகளும் :

) ஒட்டுமொத்த ஸ்தாபனத்திற்கும் உச்சபட்ச அமைப்பு அகில இந்திய மாநாடு ஆகும். ஒரு மாநில ஸ்தாபனத்திற்கு உயர்ந்தபட்ச அமைப்பு அந்த மாநிலத்தின் மாநாடு ஆகும். அதேபோல ஸ்தாபனத்தின் எந்த ஒரு மட்டத்திற்கும் உள்ள உயர்ந்தபட்ச அமைப்பு அந்தந்த மட்டங்களில் நடைபெறும் மாநாடே  ஆகும்.

) அகில இந்திய மாநாடுகள் பொதுவாக இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும்.

) இந்திய மாணவர் சங்கத்தின் இணைப்பு அமைப்புகள், அந்தந்த மட்டத்திலான மாநாடுகளில், உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கேற்ற வாக்குகளை பொறுத்து அகில இந்திய மாநாட்டிற்கு பிரதிநிதிகளை தேர்வு செய்யும். இந்திய மாணவர் சங்கத்தின் மாநாட்டிற்கு பிரதிநிதிகள் அந்தந்த மட்ட எல்லைக்குட்பட்ட மாநாடுகளிலோ, ஸ்தாபன முகாம்களிலோ தேர்ந்தெடுக்கப்படுவார்கள். ஸ்தாபன முகாம்களை பொறுத்தவரை பிரதிநிதிகள் உயர்குழுக்கள் மூலமே தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மாநாடுகளுக்கு  தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளின் எண்ணிக்கை எந்தவொரு கிளையிலும் அதன் உறுப்பினர் எண்ணிக்கையை பொறுத்தே தீர்மானிக்கப்படும். அந்தந்த மட்டத்தின் மாநாடுகளில் பங்கேற்கும் பிரதிநிதிகள் எண்ணிக்கை மற்றும் உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ற விகிதாச்சாரத்தில் சம்பந்தப்பட்ட மட்டத்தின் செயற்குழுவோ அல்லது மாநிலக்குழுவோ தீர்மானித்துக் கொள்ளும்.

) ஒரு மாநாடு எத்தகைய முறையில் நடக்க வேண்டும் என்பது குறித்தும் மாநாட்டை வழிநடத்தும் குழு மற்றும் மாநாட்டை தலைமை தாங்கி நடத்தும் தலைமைக்குழு ஆகியவை குறித்தும் இறுதி முடிவை மாநாடு தான் எடுக்கும்.

) கடந்த மாநாட்டிற்கும் இந்த மாநாட்டிற்கும் இடையிலான காலத்தில் ஸ்தாபனம் மேற்கொண்ட பணி குறித்த பரிசீலனையை மாநாடு நடத்தும்.மேலும் எதிர்கால திட்டத்தையும் மாநாடு இறுதி செய்யும்.

) மாநாடு நிர்வாகக்குழுவை தேர்ந்தெடுக்கும், இந்தக் குழுவின் எண்ணிக்கை குறித்து மாநாடே முடிவு செய்யும்.

) மாநாட்டில் தேர்தல் நடத்துவதற்கான விருப்பத்தை குறிப்பிட்ட அளவிலான பிரதிநிதிகள் தெரிவிக்கும் பட்சத்தில் தேர்தல் ரகசிய வாக்கெடுப்பு முறையில் நடைபெறும்.

நிர்வாகக்குழு :

) இரண்டு மாநாடுகளுக்கு இடையில் நிர்வாகக்குழு உயர்நிலை ஸ்தாபன அமைப்பாக செயல்படும்.

) நிர்வாகக்குழு மாநாட்டின் முடிவுகளை நிறைவேற்றும்.

) நடைமுறைப் பணிகளுக்காக அமைப்புச் சட்டத்தை வலியுறுத்தும் விதத்திலான விதிமுறைகளை நிர்வாகக்குழு உருவாக்கிக் கொள்ளும்.

) ஆண்டிற்கு குறைந்தபட்சம் 3 முறை மத்திய நிர்வாகக்குழு கூட வேண்டும். கூட்டம் குறித்த தகவல் 15 தினங்களுக்கு முன்பே  நிர்வாகக்குழு உறுப்பினர்களுக்கு அளிக்கப்பட வேண்டும். மூன்றில் ஒரு பங்கு நிர்வாகக்குழு உறுப்பினர்கள் நிர்வாகக்குழுவை கூட்டுமாறு வலியுறுத்தினால் அந்த இரண்டு மாத காலத்திற்குள் அந்த கூட்டம் கூட்டப்பட வேண்டும். ஒரு கூட்டத்தில் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் பங்கேற்றால், அந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் அங்கீகரிக்கப்பட்டவையாக கருதப்படும்.

) மத்திய நிர்வாகக்குழுவில் இடங்கள் நிரப்பப்பட வேண்டி இருந்தால், நிர்வாகக்குழு அந்த இடத்தை நிரப்பிக் கொள்ளலாம். மத்திய நிர்வாகக்குழு உறுப்பினர் ஆண்டு ஒன்றுக்கு ரூ. 1 கட்டணம் செலுத்த வேண்டும்.

) நிர்வாகக்குழு நடைமுறைப் பணிகளை செய்வதற்காக பல்வேறு உபக்குழுக்களை அமைத்துக் கொள்ளலாம்.

) நிர்வாகக்குழு தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் அந்தக்குழு கூடி ஒரு தலைவர், ஒரு பொதுச்செயலாளர் மற்றும் துணைத் தலைவர்கள், துணைப் பொதுச்செயலாளர்களை தேர்ந்தெடுக்கும். துணை நிர்வாகிகளின் எண்ணிக்கையை நிர்வாகக்குழு முடிவு செய்து கொள்ளும். மத்திய நிர்வாகக்குழுவின் மொத்த எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

) இந்திய மாணவர் சங்கத்தின் அதிகாரப்பூர்வ ஏட்டிற்கு ஆசிரியர் குழுவை நிர்வாகக்குழு அமைக்கும் அதற்கான பொறுப்பை மத்திய செயற்குழு எடுத்துக் கொள்ளும்.

) ஸ்தாபனத்தின் நிதி வரவு – செலவை கண்காணிக்க செயற்குழு உறுப்பினர் ஒருவரை மத்திய நிர்வாகக்குழு பணிக்கும்.

) சங்கத்துடன் இணைக்கப்பட்ட அனைத்து மாநிலக்குழுக்களுக்கும் நிர்வாகக் குழுவில் பிரநிதித்துவம் இருக்க வேண்டும்.

) அமைப்பின் தலைவர் பங்கேற்க முடியாத பட்சத்தில் துணைத்தலைவரும் நிர்வாகக் குழுவின் நிகழ்ச்சிகளை நடத்தலாம்.

) அகில இந்திய மாநாடு நிர்வாகக்குழுவின் முடிவின் அடிப்படையில் நடத்தப்படும்.

) ஸ்தாபன விரோத நடவடிக்கைகளுக்காக அல்லது ஒழுங்கீன நடவடிக்கைகளுக்காக மத்திய நிர்வாகக்குழு தன்னுடைய எந்தவொரு உறுப்பினரையும் அல்லது நிர்வாகியையும் நீக்குவதற்கோ, இடைநீக்கம் செய்வதற்கோ அல்லது ஸ்தாபனத்திலிருந்து வெளியேற்றுவதற்கோ அதிகாரம் உண்டு.

மத்திய செயற்குழு :

) செயற்குழு ஸ்தாபனத்தின் நிர்வாகிகளை உள்ளடக்கியது. இரண்டு மத்தியக்குழு கூட்டங்களுக்கு இடையிலான காலத்தில் செயற்குழு ஸ்தாபனத்தின் நிகழ்ச்சிகளை நடத்தும்.

) செயற்குழு உறுப்பினர்களிடம் கலந்து ஆலோசித்தப் பின்னர், பொதுச்செயலாளர் மத்தியக்குழு கூட்டத்தைக் கூட்டலாம்.

ஸ்தாபனத்தில் இணைக்கப்பட்ட அமைப்புகளோ அல்லது மாநிலக்குழுக்களோ, இந்திய மானவர் சங்கத்தின் அமைப்பு சட்டத்தில் கூறப்பட்டுள்ள விதிமுறைகளுக்கு விரோதம் இல்லாத அல்லது மாறுபடாத தங்களது சொந்த அமைப்புச் சட்டத்தை வகுத்துக் கொள்ளலாம்.

அமைப்புச் சட்டத்தில் மாற்றம்  :

 1. அமைப்புச் சட்டத்தின் கீழ் உள்ள விதிமுறைகள் மத்திய நிர்வாகக் குழுவால் திருத்தப்படலாம்.
 2. தனிப்பட்ட உறுப்பினர்களின் உரிமைகளை உறுதிசெய்வதற்கு கிளைக்குழுக்கள் குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் பேரவைக் கூட்டங்களைக் கூட்ட வேண்டும். இந்தக் கூட்டங்களில் வெளிப்படுத்தப்படும் கருத்துக்களின் அடிப்படையில் கிளைக் குழுக்கள் தங்கள் பணிகளில் தேவையான மாறுதல்களை அவசியம் செய்துகொள்ள வேண்டும். ஆனால் அந்தப் பேரவைக் கூட்டங்கள் ஆண்டுதோறும் நடைபெறும் கிளை மாநாடுகளுக்கு மாற்றாக அமையாது.
 3. இத்தகைய பேரவைக் கூட்டங்களை நடத்துவது ஒரு கிளைக்குழுவின் உறுப்பினர் எண்ணிக்கையை தீர்மானிப்பதில் அர்த்தமுள்ள செயல்பாடக அமையும். இத்தகைய கூட்டங்களின் மூலம் கல்வி நிறுவனத்திற்குள்ளேயே கிளையை அமைக்க அடிப்படை ஆதாரத்தை ஏற்படுத்த முடியும்.இத்தகைய கிளைகளை உயர்குழுக்களின் ஆலோசனையோடு மேலும் உயர்த்த முடியும்.
 4. ஸ்தாபன செயல்பாட்டிற்கான ஜனநாயக விதிமுறைகளை வரையறுக்கும் போது பல்வேறு மட்டங்களில் உள்ள வெவ்வேறு குழுக்களின் பொறுப்பையும், உரிமையையும் வரையறுக்க வேண்டியது அவசியம். பல்வேறு மட்டங்களில் உள்ள குழுக்களின் உரிமைகள் பின்வருமாறு:

) அடிப்படைக் கிளைக்குழுவானது அந்தந்த கல்வி நிறுவன அளவில் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து முடிவுகளை மேற்கொள்ள முழுமையான உரிமைப் பெற்றுள்ளது. அதே நேரத்தில் அந்த கல்வி நிலையத்தின் எல்லையைத் தாண்டி எடுக்கப்படும் முடிவுகள் அமலாகாது.

) பகுதிக்குழு அந்தந்தப் பகுதி அளவில் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து முடிவுகள் எடுக்க உரிமை படைத்தது. அந்தப் பகுதிக்குழுவின் எல்லையைத் தாண்டிய அமலாக்கத்தை கொண்டிருக்கக் கூடாது.

) பகுதிக்குழு அல்லது மணடலக்குழுக்கள் அந்தந்தப் பகுதி அல்லது மண்டல அலவில் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து முடிவுகள் எடுக்கும் உரிமை படைத்தவை. அந்தப் பகுதிக்குழு அல்லது மண்டலக் குழுவின் எல்லையைத் தாண்டி எடுக்கப்படும் முடிவுகள் அமலாகாது.

) மாவட்டக்குழு அந்த மாவட்ட அளவில் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து முடிவுகள் எடுக்கும் அதிகாரம் படைத்தவை. அந்த மாவட்டக்குழுவின் எல்லையைத் தாண்டி எடுக்கப்படும் முடிவுகள் அமலாகாது.

) மாநிலக்குழு அந்த மாநில அளவில் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து முடிவுகள் எடுக்க அதிகாரம் படைத்தது. அந்த மாநிலக்குழுவின் எல்லையைத் தாண்டி எடுக்கப்படும் முடிவுகள் அமலாகாது. மாநிலக் குழுவிற்கு பத்திரிகைகள் வெளியிடும் அதிகாரம் உண்டு. அதற்கு கீழே உள்ள குழுக்கள் மாநிலக்குழுவின் அனுமதியுடன் தான் பத்திரிக்கை வெளியிடலாம்.

) தேசிய மற்றும் சர்வதேச அளவிலான அனைத்து பிரச்சினைகளிலும் முடிவுகளை எடுக்கும் அதிகாரம் மத்திய நிர்வாகக்குழுவிற்கு உள்ளது.

 1. நாட்டின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு பரிமாணங்களில் புதிய மாணவர் அமைப்புகள் தோன்றும் நிலையில், பிராந்திய ரீதியில் வரும் மாணவர்களை ஸ்தாபனத்தில் இணைத்துக் கொள்ள வேண்டும். ஒன்றுபட்ட ஜனநாயகப் பூர்வமான மாணவர் இயக்கத்தை மேலும் முன்னெடுத்துச் செல்ல மேற்கூறப்பட்ட அமைப்பு விதிமுறைகளை பின்பற்றுவது அவசியம். இந்த ரீதியில் முடிவுகளை மேற்கொள்ளவும் நடைமுறை பணிகளை திட்டமிடவும் .இந்திய மாணவர் சங்கத்தின் மத்திய நிர்வாகக்குழுவிற்கு முழு அதிகாரம் உண்டு.

#செப்டம்பர் 27-30,2008ல் கொல்கத்தாவில் நடந்த 13-வது அகில இந்திய மாநாட்டில் கொண்டு வரப்பட்ட திருத்தம்:

கல்லூரி மாணவர்களுக்கான  உறுப்பினர் பதிவுக்கான ஆண்டு சந்தா ரூ. 2 எனவும், பள்ளி மாணவர்களுக்கான உறுப்பினர் பதிவுக்கனான ஆண்டு சந்தா ரூ. 1 எனவும் தீர்மானிக்கப்படட்து.

#ஜனவரி 22-25, 2016ல் ராஜஸ்தான் மாநிலம் சிகாரில் நடந்த 15-வது அகில இந்திய மாநாட்டில் கொண்டு வரப்பட்ட திருத்தம்:

கல்லூரி மாணவர்களுக்கான  உறுப்பினர் பதிவுக்கான ஆண்டு சந்தா ரூ. 2 எனவும், பள்ளி மாணவர்களுக்கான உறுப்பினர் பதிவுக்கான ஆண்டு சந்தா ரூ. 2 எனவும் தீர்மானிக்கப்பட்டது.